க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்து க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய புலமைப்பரிசில் பெறுவதற்காக ஒரு கல்வி வலயத்திலிருந்து தகுதியுடைய 30 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அதன்படி நாடு முழுவதுமுள்ள 99 கல்வி வலயங்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் 2970 மாணவர்களுக்கு இப்புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.
புலமைப்பரிசில் வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, அவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் வரை மாதாந்தம் 5,000/- ரூபா வீதம் ஆகக்கூடியது 24 மாதங்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வருட க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி க.பொ.த உயர்தர கல்வியாண்டு ஆரம்பிக்கப்பட்டதும் இந்த புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்பங்களை கோரும் வகையில் பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்படும்.
இது தொடர்பாக மாகாண பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு துரிதமாக அறிவிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.