நாட்டிற்கான நீண்ட கால கடன் திட்டத்தின் கீழ் நிலக்கரி விநியோகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட விநியோகஸ்தருடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப் போவதில்லை என லங்கா நிலக்கரி நிறுவனம் அதிரடி அறிவிப்பை தெரிவித்துள்ளது.
விநியோகஸ்தரால் செயற்திறனான முறிகள் சமர்ப்பிக்கப்படாமையே இதற்கு காரணம் என லங்கா நிலக்கரி நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரிடம் கொள்வனவு
37 மில்லியன் டொலா் முறிகளே செயற்திறனுடையவை எனவும் நாட்டில் காணப்படும் கடன் மற்றும் அமுலில் உள்ள சட்டத்திற்கு அமைய விநியோகஸ்தரால் உரியவாறு முறிகள் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் நிலக்கரி நிறுவனம் தெரிவித்தது.
அதற்கமைய, தற்போது விலைமனு கோரப்பட்டுள்ள சிங்கப்பூர் நிறுவனத்திடமிருந்து நாட்டிற்கு தேவையான நிலக்கரியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா நிலக்கரி நிறுவனம் குறிப்பிட்டது.
இதற்கான விலைமனுவில் 50 வீதமான பங்கு கடந்த வருடம் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் எஞ்சிய 50 வீதத்தை இந்த வருடம் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.
5 கப்பல்கள் முன்பதிவு
குறித்த பங்கானது டிசம்பர் மாத்திற்கு பின்னர் பெற்றுக்கொள்ளப்படவிருந்த போதிலும் நாட்டில் காணப்படும் நிலைமை காரணமாக விரைவாக அதனை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, தலா 60,000 மெட்ரிக்தொன் நிலக்கரி அடங்கிய 5 கப்பல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக லங்கா நிலக்கரி நிறுவனம் குறிப்பிட்டது. அதன்படி முதலாவது கப்பல் அடுத்த மாதம் 20 அம் திகதி முதல் 25 ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் , நாட்டிற்கான நீண்ட கால கடன் திட்டத்தின் கீழ் நிலக்கரி விநியோகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள விநியோகஸ்தரிடமிருந்து நிலக்கரியை கொள்வனவு செய்யும் போது, ஒரு மெட்ரிக் தொன் நிலக்கரிக்கு 30 டொலர் இலாபம் கிடைக்குமென லங்கா நிலக்கரி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.