தாயும், மகளும் இரவு நேரத்தில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது, சமையலறைக்குள் புகுந்த நபரொருவர் சோற்றுப் பானையில் எஞ்சி இருந்த சோற்றையும் சீனி சம்பலையும் சாப்பிட்டு விட்டு தப்பி சென்றுள்ளார்.
இச்சம்பவம் கேகாலை, தேவாலேகம, கெசல்வத்துகொட பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. வீட்டுக்காரப் பெண் தனது காணியில் வீடு ஒன்றை நிர்மாணித்த பின்னர் எஞ்சிய பலகைகளை குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் குவித்து வைத்திருந்துள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
12 ஆம் திகதி இரவு குவித்து வைக்கப்பட்டிருந்த பலகைகளில் 10 பலகைகளை யாரோ திருடிச் சென்றுள்ளதாக 13 ஆம் திகதி தேவாலகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்பின்னர் 13 ஆம் திகதி இரவு தாயும் மகளும் சீனி சம்பலுடன் சோறு சாப்பிட்டுவிட்டு எஞ்சியதை காலை சாப்பிடவென வைத்துள்ளனர்.
சாப்பிட்ட பின்னர் இருவரும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது ஜன்னல் வழியாக சமையலறைக்குள் புகுந்த திருடன் எஞ்சிய சம்பலையும் சோற்றையும் சாப்பிட்டு விட்டு சென்றதாக கூறப்படுகின்றது.