முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டு செலவீனங்களானது அவரது தனிப்பட்ட நிதியாகும்.
அரசாங்கம் ஒருபோதும் அந்த செலவீனங்களை ஏற்கவோ பொறுப்புக்கூறவோ தீர்மானித்தது இல்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து செல்வதற்கு பயன்படுத்திய பிரத்தியேக விமானத்திற்கு இலங்கை அரசாங்கமே பணம் செலுத்தியுள்ளது.
அவ்வாறெனில் முன்னாள் ஜனாதிபதி தற்போதும் சிறப்புரிமைகளுடனா வாழ்ந்து கொண்டிருக்கின்றார்?’ என்று ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு, சட்டத்தின் பிரகாரம் சிறப்புரிமைகளை வழங்க வேண்டிய பொறுப்பு காணப்படுகிறது என்று பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் பேச்சாளர் குறிப்பிட்ட இந்த விடயம் தொடர்பில் ஊடகங்கள் தவறான புரிதல்களுடன் செய்திகளை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் செவ்வாயன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில், முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவுகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியொன்றை எழுப்பினார்.
முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதிகளுக்கு சட்டத்தின் மூலம் சில வரப்பிரசாதங்கள் கிடைக்கின்றது என வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன அதற்கு பதிலளித்தார்.
அவர் கூறிய அந்த கூற்றை முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவுகளுக்காக அரசாங்கம் பணத்தினை செலவிடுகிறது என்று கருத்து புலப்படும் வகையில் சில ஊடகங்கள் செய்திகள் பிரசுரித்திருந்தன. இது தொடர்பில் மேலும் ஆராய்ந்து பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தனது வெளிநாட்டு செலவுகள் குறித்து சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தவறானவை என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அனைத்து செலவுகளும் தனது தனிப்பட்ட பணத்தில் செலவிடப்படுவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.’ என தெரியவந்துள்ளது.