பாகிஸ்தானின் தைமூர் என்ற போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் பங்களாதேஷ் அனுமதி மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கப்பலான ஆலம்கிர், நேற்று இந்தியாவின் குஜராத் கடல் பகுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான கடல் எல்லையைக் கடந்து இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்தது.
உடனடியாக இதை அறிந்த இந்திய கண்காணிப்பு விமானம், பாகிஸ்தான் போர்க் கப்பலின் இருப்பிடம் குறித்து எச்சரிக்கை விடுத்ததுடன் அதன் பகுதிக்குத் திரும்பும்படி வலியுறுத்தியுள்ளது.
சீனாவில் கட்டமைக்கப்பட்ட PNS தைமூர் என்ற இந்த போர்க்கப்பல், ஷாங்காய் நகரிலிருந்து கராச்சிக்கு செல்லும் வழியில் கொழும்புக்கு, நல்லெண்ண நோக்கில் பயணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பல் கம்போடிய மற்றும் மலேசிய கடற்படைகளுடன் பயிற்சிகளை நடத்திய நிலையிலேயே பாகிஸ்தானின் கராச்சி திரும்புகிறது.
ஷாங்காயில் உருவாக்கப்பட்ட இந்த கப்பல், கராச்சிக்கு தனது முதல் பயணத்தை மேற்கொள்கிறது.
கராச்சியில் பாகிஸ்தான் கடற்படையில் இணைவதற்குச் செல்லும் வழியில் கொழும்பு துறைமுக அழைப்பை ஏற்று, பாகிஸ்தானின் இந்த ஏவுகணைப் போர்க்கப்பல், இலங்கை வருகிறது.
இந்த கப்பல் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சீனாவின் யுவான் வோங் – 5 என்ற உளவுக் கப்பல் ஒன்று ஹம்பாந்தோட்டைக்கு வருவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், குறித்த கப்பலின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் ராஜதந்திர ரீதியில் சிறு இடைவெளியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.