நாட்டில் எதிர்க்காலத்தில் வன்முறைகள் வெடிக்குமானால், ஐ.நா.வின் அமைதிப்படை இலங்கைக்குள் வருகைத் தரும் ஆபத்து உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ எச்சரிக்கை விடுத்தார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தேர்தலில் தோல்;வியுற்று ஒன்றரை வருடங்கள் கழித்து நாடாளுமன்றுக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, இன்று தாமரை மொட்டுக் கட்சியினரின் ஆதரவுடன் ஜனாதிபதியாகியுள்ளார்.
அதாவது தேர்தலில் வெற்றிபெற்ற ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேற்றி, தேர்தலில் தோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கியுள்ளார்கள்.
மே 9 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்று, ஜுலை 9 ஆம் திகதி பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இன்று நேரடியாக ஜனாதிபதி ஆசனத்தில் அவர் அமர்ந்துள்ளார். 134 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.
டளஸ் அழகப்பெரும ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தால், அவர் பக்கத்தில் பல கட்சிகள் உள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதனுடன் இணைந்த ஏனையக் கட்சிகள் என நாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் இணைந்து செயற்பட்டிருக்கும்.
ஆனால், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகியுள்ளமையினால், அந்த நிலைமை இல்லாமல் போயுள்ளது.
சர்வக்கட்சி அரசாங்கமொன்று இதன் ஊடாக ஒருபோதும் அமையாது. இதனால் மக்கள் மீண்டும் மீண்டும் துன்பப்படும் நிலைமையே காணப்படுகிறது.