இந்துக் கடவுளான காளியின் வேடமிட்ட பெண் ஒருவர் சிகரெட் பிடிப்பது போன்ற பட போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் வசிக்கும் இயக்குனர் லீனா மணிமேகலை தனது புதிய படமான காளியின் போஸ்டரை கடந்த சனிக்கிழமை வெளியிட்டார்.
அதில் காளியின் கையில் ஒரு சிகரெட் இருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது . மேலும் காளிதேவியின் கையில் திரிசூலம், அரிவாள் ஆகிய ஆயுதங்களுடன் LGBTQ+ சமூகத்தினரின் பெருமித அடையாளக் கொடியும் உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்திற்கு இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது .
இந்து தெய்வத்தை அவமானப்படுத்தி இந்துக்களின் மனதி புண்படுத்திய இயக்குனர் மணிமேகலை கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் இணையத்தில் #ArrestLeenaManimekalai என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.
யார் இந்த மணிமேகலை
‘மாடத்தி’, ‘செங்கடல்’ போன்ற படங்களால் கவனம் பெற்றவர் சுயாதீன திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை. அவரது படங்கள் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்றுள்ளன.
அவர் தற்போது ‘காளி’ என்ற நிகழ்த்துக் கலை ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் லீனா மணிமேகலை ‘காளி’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 2-ம் திகதி பதிவிட்டிருந்தார். அந்த போஸ்டரில், ‘காளி’ வேடம் தரித்த பெண் ஒருவர் புகைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்.
அத்துடன் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கான எல்ஜிபிடி கொடியையும் அவர் பிடித்துக்கொண்டிருப்பது போல அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் சர்ச்சை குறித்து லீனா மணிமேகலை விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
”எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர்தான் என்றால் தரலாம்” என இயக்குனர் லீனா மணிமேகலை பதிவிட்டுள்ளார்.