ராஜிகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் வாகன பாகங்களை திருடியவர்களை கையுமெய்யுமாகப் பிடித்த பிரதேச மக்கள், திருடர்களிடம் இருந்து மீட்கப்பட்ட முச்சக்கர வண்டியைத் மின்கம்பத்தில் தொங்கவிட்டதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது, மக்களின் வாகனப் பாகங்கள் மற்றும் எரிபொருளைத் திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட குறித்த முச்சக்கர வண்டியே, மக்களால் பறிமுதல் செய்யப்பட்டு தொங்க விடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களைச் சுற்றியுள்ள திருட்டு வழக்குகள் கணிசமாக அதிகரித்துள்ளன.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வெளியே எரிபொருள் பவுசருக்காக மக்கள் தங்கள் வாகனங்களுக்குள் காத்திருக்கும் போது கார் உதிரிபாகங்கள் மற்றும் எரிபொருள்கள் திருடப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன் சில ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்கள், நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களின் எரிபொருள் கம்பிகளை வெட்டி, தொட்டிகளில் மிச்சமிருக்கும் மில்லி லிட்டர் எரிபொருளைத் திருடுவதற்கும் கூட முயற்சி எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.