பாடசாலை பைகள், தொழிலுக்கு கொண்டுசெல்லும் பைகள், வெளிநாட்டு பயணப் பைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பயணப் பைகளின் விலைகளும் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
உள்நாட்டு உற்பத்தி தட்டுப்பாடு மற்றும் கடந்த சில மாதங்களாக நிலவும் இறக்குமதி கட்டுப்பாடு என்பன இதற்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உள்நாட்டு பைகள் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் பற்றாக்குறை மற்றும் அவற்றின் விலைகள் அதிகரித்தமையே இதற்கான காரணம் என உள்ளூர் பைகள் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், இறக்குமதிப் பொருட்களுக்கான வரியை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்துடன், தற்போது அதிக விலையில் காணப்படும் பைகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என பைகள் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை பாலர் பாடசாலை பைகளின் விலைகளும் அதிகரித்துள்ளன. முன்னர் 450 ரூபாவாக காணப்பட்ட சிறிய பைகள் தற்போது 950 ரூபாவாகவும், 700 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பைகள் தற்போது, 1,400 ரூபாவாக அதிகரித்துள்ளன. அதோடு வெளிநாட்டுக்கு செல்பவர்கள் நல்ல பைகளைத் தேடுகின்றதாகவும் எனினும் , அவை கிடைப்பதில்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.