புகைத்தல் சுற்று சூழலுக்கு அச்சுறுத்தல்’ எனும் தொனிப்பொருளில் இந்த முறை சர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் உள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் அறிவித்துள்ளது.
இலங்கையில் புகைத்தல் பாவனையின் காரணமாக நாளாந்தம் 55 பேர் மரணத்தைத் தழுவுவதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் வருடாந்தம் சுமார் 20,000 இலங்கையர்கள் மரணமடைகிறார்கள்.
உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 31ம் திகதி சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு இருப்பதுடன் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. புகைப் பொருள் பாவனையானது சூழலை மாசடையச்செய்யும் பிரதான காரணிகளில் ஒன்றாகும்.
குறிப்பாக, சிகரட் தயாரிப்பதற்கு உலகளாவிய ரீதியில் சுமார் 600 பில்லியன் மரங்கள் வருடாந்தம் வெட்டப்படுகின்றன. சுமார் 84 பில்லியன் தொன் காபன் டயொக்சைட் துணிக்கைகள் சூழலில் சேர்வதனால் புவியின் வெப்பநிலை அதிகரிக்கப்படுகின்றது.
மேலும் வருடாந்தம் சிகரெட் தயாரிக்க சுமார் 22,000 பில்லியன் லீற்றர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. புகையிலை உற்பத்தியினால் 2 மில்லியன் டொன் கழிவுகள் தேங்குகின்றன. நாடு தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.
அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்து கொள்வதற்கு தேவையான டொலர்கள் பற்றாக்குறை காணப்படும் இந்த தருணத்திலும் வீணாக சிகரட்டிற்கு செலவழிக்கபடுவதால் எஞ்சி இருக்கின்ற டொலர்களும் வீணடிக்கப்படுகின்றன.
மேலும் சிகரட் நிறுவனத்திடம் வரி அறவிடப்பட்டாலும் அந்த தொகையையும் விட பாரிய தொகை புகைத்தலினால் ஏற்படும் பாதிப்புக்களிற்கு செலவிடப்படுகிறது. அனைத்து அத்தியாவசியமான பொருட்களின் விலைகளும் சடுதியாக உயர்வடைந்த போதிலும் சிகரட்டிற்கான விலை மிகவும் குறைவான சதவீதத்திலேயே அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.
தற்போதைய பணவீக்கத்திற்கு ஏற்ப சிகரட் விலை அதிகரிகரிக்கப்படவில்லை என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.