அத்தியவசிய பொருட்கள் மற்றும் சேவை தட்டுப்பாடுகளை துரிதமாக நீக்கி, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது சம்பந்தமான யோசனைகளை பெற்று, அவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிறப்பு குழுவை நியமித்துள்ளார்.
இந்த குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன,கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, உப தலைவர் அகில விராஜ் காரியவசம், தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதனடிப்படையில் அத்தியவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடுகள் இன்றி மக்களுக்கு வழங்குவதற்காக அவற்றுடன் சம்பந்தப்பட்ட துறைகளுடன் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் பொறுப்புவஜிர அபேவர்தன மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனை தவிர மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாணும் பொறுப்பு ருவான் விஜேவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் பசளை நெருக்கடிக்கு தீர்வுகாணும் பொறுப்பு அகில விராஜ் காரியவசத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
பெட்ரோல்,டீசல் போன்ற எரிபொருள் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறுப்பு சாகல ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட துறைகளின் இறக்குமதியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று மாலை பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்படும் யோசனைகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தெளிவுப்படுத்தப்படும் எனவும் அதற்கான சிறப்பு கலந்துரையாடல் நாளை நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வுகாண்பது இதன் நோக்கம் எனவும் பாலித ரங்கே பண்டார மேலும் கூறியுள்ளார்.