சாலையில் தலையில் சுமையுடன் சென்ற இஸ்லாமிய பெண் சிரமப்பட்ட நிலையில், அவ்வழியாக சென்ற ஹனுமன் வேடமிட்ட நபர் அவருக்கு ஓடோடிச் சென்று உதவிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பிறருக்கு உதவுவது, குழந்தைகள் சிரிப்பு போன்ற வீடியோக்களைப் பார்த்த பிறகு, இதயம் உண்மையில் சிலிர்ப்பதையும் நம்மால் உணர முடியும், அப்படி ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தற்போது இந்தியா முழுவதும் பரவி வரும் அந்த வீடியோவில் இஸ்லாமிய பெண் ஒருவர் தலையில் வைத்துள்ள கூடையில் காய்கறி, பழங்கள் ஏதோ ஒன்றை சாலையில் கொண்டு செல்வதை பார்க்க முடிகிறது.
எடை அதிகமுள்ள அந்த கூடையை வயதான இஸ்லாமிய பெண் சிரமப்பட்டு தூக்கி செல்கிறார்.ஒரு கட்டத்தில் அந்த பெண் நிலைதடுமாற, அதிலிருந்த பழங்கள் அனைத்தும் சாலையில் விழுகிறது.
அப்போதுதான் அவ்வழியாக சைக்கிளில் சென்ற அனுமன் வேடமிட்ட ஒருவர் வந்து சைக்கிளை பக்கத்தில் நிறுத்தி வைத்து விட்டு அந்த இஸ்லாமிய பெண்ணுக்கு உதவுவதை வீடியோவில் காணலாம்.
இந்தக் காணொளியைப் பார்த்த பிறகு கடவுள் உண்மையில் உதவுகிறார் என்று தோன்றும். சத்தீஷ்கர் மாநில ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் சரண், உதவும் கரங்கள் என்ற கேப்ஷனுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பகிர்ந்துள்ள நிலையில், பலரும் அதனை தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த இரு நாட்களாக ட்ரெண்டிங்கில் இருக்கும் அந்த வீடியோவை ஆயிரக்கணோக்கனோர் பகிர்ந்து வரும் நிலையில், லட்சக்கணக்கானோர் அதனை லைக் செய்துள்ளனர்.
மேலும் உபி, ஹரியானா, டெல்லி போன்ற இடங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் நிகழ்வுகள் நடந்து வரும் நிலையில், இந்த காட்சி மனிதத்தை போதிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
‘உண்மையில் இந்த வீடியோ இதயத்திற்கு அமைதி அளிக்கிறது.’ எனவும், “பாகுபாட்டை மனிதகுலத்திலிருந்து மட்டுமே ஒழிக்க முடியும்” என பலரும் அந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.