கல்வி மற்றும் சுகாதார நோக்கங்களுக்காக வெளிநாடு செல்பவர்களுக்குத் தேவையான அந்நியச் செலாவணியை வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி வளாகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டில் படிக்க அனுப்பினால், அவர்கள் பணம் அனுப்ப வேண்டும் என்றால், வங்கிகளில் இருந்து பணம் கொடுக்காவிட்டால் வேறு வழியில்லை.
அதன் பின்னர் அவர்கள் வெளிச் சந்தைகளுக்குச் சென்று ஏதாவது வாங்க வேண்டும். எனவே, கல்வி மற்றும் சுகாதாரத் தேவைகளுக்காக வங்கிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
எனவே வெளிநாட்டில் செலவழிக்க வேண்டிய அத்தியாவசிய மனிதாபிமான செலவுகளுக்கு, குறிப்பாக 10,000 டொலர், 5,000 டொலர் போன்ற சிறிய தொகைகள், இவை அனைத்தும் வங்கி அமைப்பு மூலம் செலுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்