இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
“ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக” ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் லிஸ் த்ரோசல் தெரிவித்துள்ளார்.
“நெருக்கடியான பொருளாதார மற்றும் அரசியல் சவால்களுக்கு தீர்வு காண உடனடியாக இலங்கை அரசாங்கம், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்தினர் உடனடியாக அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபடுமாறு ” அவ் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
“நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு அதிகாரிகள் அவசரகால நிலை மற்றும் பிற கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தமையை நாங்கள் அவதானித்து வருகின்றோம்.
சமீப மாதங்களாக நாடு முழுவதும் அமைதியான முறையில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களால் பொதுமக்களின் விரக்தி அதிகரித்து வருகிறது. எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு திடீர் தட்டுப்பாடு, மின்வெட்டு போன்றவற்றுக்கு மத்தியில் கடந்த இரண்டு வாரங்களாக நிலைமை மோசமாகியுள்ளது.
இதனால் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அடிப்படைப் பொருட்களைப் பெறுவதில் உள்ள அவநம்பிக்கையானது இலங்கை மக்களின் எதிர்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளது.
மார்ச் 31 அன்று ஜனாதிபதியின் இல்லத்திற்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு, அரசாங்கம் ஏப்ரல் 1 ஆம் திகதி அவசரகால நிலையை அறிவித்தது, ஏப்ரல் 2 ஆம் திகதி மாலை 6 மணி முதல் 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை அறிவித்தது மற்றும் ஏப்ரல் 3 அன்று 15 மணி நேரம் சமூக ஊடக வலையமைப்புகளை மூடியது. போராட்டக்காரர்கள் மீது அதிகப்படியான மற்றும் தேவையற்ற பொலிஸ் வன்முறைகள் நடந்ததாகவும் செய்திகள் வந்துள்ளன.
அவசரகால நிலைகள் தொடர்பான நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு இணங்க வேண்டும், எதிர்ப்பை நசுக்கவோ அல்லது அமைதியான போராட்டத்தைத் தடுக்கவோ பயன்படுத்தக்கூடாது என்பதை நாங்கள் இலங்கை அதிகாரிகளுக்கு நினைவூட்டுகிறோம்” எனவும் அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது