யாழில் போராட்டத்தைக் காணொளிப்பதிவு செய்த மர்ம நபரைப் பல்கலைக்கழக மாணவர்கள் சேர்ந்து விரட்டியடித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தற்போதைய அரசின் முறையற்ற ஆட்சி காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் நேற்றையதினம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களாலும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மாணவர்களது போராட்ட பேரணியானது திருநெல்வேலி – இலுப்பையடி சந்திக்கு அருகாமையில் நகர்ந்து கொண்டிருந்தவேளை வீதியோரத்தில் நின்ற மர்மநபர் ஒருவர் போராட்டத்தினை காணொளி எடுத்தார்.
இதனை அவதானித்த மாணவர்கள் அவரிடம் சென்று “நீங்கள் யார்? எதற்கு காணொளி எடுக்கின்றீர்கள்” என வினவியபோது, அதற்கு அவர் “நான் ஊடகவியலாளர்” எனக்கூறினார்.
அதற்கு மாணவர்கள், “ஊடகவியலாளர் என்றால் உங்களது அடையாள அட்டையைக் காட்டுங்கள்” என காட்டுங்கள் என கேட்ட வேளை தனது தேசிய அடையாள அட்டையினையும் நிதி நிறுவனம் ஒன்றின் அடையாள அட்டையினையும் காண்பித்தார்.
“நாங்கள் இதை கேட்கவில்லை ஊடக அடையாள அட்டையினை தான் கேட்கின்றோம். தயவு செய்து இவ்விடத்திலிருந்து வெளியேறுங்கள்” எனத் திட்டி அவரை விரட்டியடித்தனர்.