இலங்கையின் தற்போதைய அரசாங்கம் முடிவுக்கு வரும் நாளில் ராஜபக்சவினரின் அரசியல் மாத்திரமல்ல கடந்த 80 ஆண்டுகளாக இருந்து வந்த குடும்ப அரசியலும் முடிவுக்கு வரும் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ராஜபக்சவினர் இழந்து வரும் வாக்கு வங்கியை சேகரித்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவுக்கு பெற்றுக்கொடுக்கும் சூழ்ச்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.
நாமல் ராஜபக்சவின் துரதிஷ்டம் காரணமாக தற்போதைய அரசாங்கம் முடிவுக்கு வரும் போது ராஜபக்சவினரின் அரசியலும் முடிவுக்கு வரும். அது மாத்திரமல்ல 80 ஆண்டு குடும்ப அரசியலும் முடிவுக்கு வரும். எமக்கு ராஜபக்ச ஒருவரை மன்னராக கொண்டு வரும் தேவையில்லை.
எந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்தாலும் நாட்டை ஆளப்போவது பசில் ராஜபக்ச. பசில் ராஜபக்சவின் செயற்பாடுகளை நோக்கும் போது எமக்கு ஒட்டோமான் பேரரசில் இருந்த கோஷம் சுல்தானா நினைவுக்கு வருகிறார்.
17 ஆம் நூற்றாண்டு வரை மூன்று கண்டங்களில் பரவி இருந்த ஒட்டோமான் பேரரசின் அரசரின் அஸ்மான் சுல்தானின் அழகான மனைவியே கோஷம் சுல்தானா. அந்த பெண்ணே மன்னருக்கு பின்னால் இருந்து நாட்டை ஆட்சி செய்தார்.
மன்னர் இறந்த பின்னர் புதல்வரான முராத்தை சிங்காசனத்தில் அமர்த்தி அந்த பெண் ஆட்சி செய்தார். தாயின் தலையீடுகளை எதிர்த்தன் காரணமாக முராத்தை கொலை செய்து விட்டு, இளைய புதல்வரான இப்ராஹிமை சிங்காசனத்தில் அமர்த்தி பொம்மை ஆட்சியை நடத்தி வந்தார்.
அவர் எதிர்த்ததும் மகனை கொலை செய்து விட்டு பேரனை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வந்தார். அன்று துருக்கியில் யார் மன்னராக பதவிக்கு வந்தாலும் ஆட்சி செய்தது கோஷமி சுல்தானா.
அதேபோல் இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டை ஆட்சி செய்ய போவது பசில் ராஜபக்ச. 20வது திருத்தச் சட்டம் காரணமாக பசில் மன்னரானதாக சிலர் மாயையை பரப்பி வருகின்றனர்.
20வது திருத்தச் சட்டத்தின் மூலம் அவருக்கு நிதியமைச்சர் பதவி மாத்திரமே கிடைத்தது. நிதியமைச்சருக்கு நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரம் எப்படி கிடைக்கும்?. ஜே.ஆர் ஜெயவர்தனவின் அரசாங்கத்தை ரொனி டி மெல் ஆட்சி செய்தாரா?.
பிரேமதாசவின் அரசாங்கத்தை கே.என். சொக்சி கட்டுப்படுத்தினரா?. சிறிசேனவின் அரசாங்கத்தை மங்கள சமரவீர கட்டுப்படுத்தினாரா?. இல்லை.
பசில் ராஜபக்ச 20வது திருத்தச் சட்டத்தின் மூலம் கிடைத்த நிதியமைச்சர் பதவியை வைத்து அல்ல.நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் என்ற முறையிலேயே அவர் நாட்டை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளார். சரியாக கூறுவதானால், நாட்டை அழித்து வருகிறார்.
19வது திருத்தச் சட்டத்தின் இருந்த ஒரு ஓட்டையை பயன்படுத்தி அர்ஜூன் மகேந்திரன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வர முடிந்தது. 20 வது திருத்தச் சட்டத்தை கொண்டு வரவிட்டாலும் பசில் 19வது திருத்தச் சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி நாட்டை ஆட்சி செய்திருப்பார்.
19வது திருத்தச் சட்டத்தில் உள்ள மூடப்படாத சில ஓட்டைகளை மூட வேண்டும். இந்த பிரச்சினைக்கு தீர்வாக இரட்டை குடியுரிமை பெற்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதியாக மாத்திரமல்ல, எந்த அரச பதவியையும் வகிக்க முடியாதவாறு 22 வது அரசியலமைப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர எதிர்பார்த்துள்ளோம்.
இதன் மூலம் இரட்டை குடியுரிமை பெற்ற ஒருவர் மக்கள் பிரதிநிதியாக, அரசாங்கத்தில் பதவிகளை வகிக்க முடியாது என்பதுடன் நீதித்துறையில் நீதிபதியாகவும் கடமையாற்ற முடியாது எனவும் உதய கம்மன்பில கூறியுள்ளார்.