தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற ரெலோ அமைப்பு, ஜனாதிபதியுடனான சந்திப்பை ஏன் புறக்கணித்தார்கள் என்பது கேள்விக்குறியே என்றும், அவ்வாறெனில் அவர்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேற வேண்டுமெனவும் அவர் கூறினார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியுடனான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சந்திப்பு நடைபெற்ற போதும் கூட இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு தொடர்பில் எந்தவிதமான பேச்சும் நடக்கவில்லை என்பது ஊடகங்கள் மூலம் உறுதியாகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கத்திலிருந்து 13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்துவதற்கான அழுத்தங்கள் அரசுக்கு வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிப்படுத்துகின்றன.
இது சம்பந்தமாக நாம் தெரிவித்து வந்த கருத்துக்களானது மீண்டும் மீண்டும் உறுதியாவதாகவே கருதுகிறோம். அதாவது இனப்பிரச்சினைக்கு 13 ஆவது திருத்தச்சட்டம் தீர்வல்ல .ஒற்றையாட்சிக்குள் உள்ள அந்த தீர்வை ஏற்கமுடியாது.
கடந்த காலங்களில் புலம்பெயர் தமிழர்களை தடை செய்த அரசு தற்போது பொருளாதார நெருக்கடி எழுந்துள்ளபோது அதே புலம்பெயர்ந்த மக்களின் முதலீடுகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கின்றது.
புலம்பெயர் தமிழர்கள் மீதான தடையை நீக்குவதற்கு கூட அரசு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி இருக்கலாம். இது எதை காட்டுகிறது என்றால் தடை என்பது இலங்கை அரசாங்கத்தினுடைய தேசிய பாதுகாப்பு சம்பந்தமான விடயம் அல்ல என்பதே எனவும் அவர் தெரிவித்தார்.