இலங்கை அடுத்த மாதம் சர்வதேச நாணய நிதியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள அதேவேளை நாட்டின் பொருளாதார நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக உலக வங்கியின் உதவியை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் அந்நிய செலாவணி கையிருப்பு 70 வீதமாக குறைந்ததுடன் உணவு, எரிபொருள் உட்பட அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் போராடி வருகிறது.
நாட்டின் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மற்றும் சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களில் ஏற்படும் பதற்றத்தை தணிக்க இராணுவத்தினரை இலங்கை அரசு கடமையில் ஈடுபடுத்தியுள்ளது.
பெப்வர மாதத்தில் இருந்து 1.31 பில்லியன் என்ற சொற்ப அந்நிய செலாவணியை கையிருப்பில் வைத்திருக்கும் இலங்கைக்கு ஜூலை மாதம் காலவதியாகும் ஒரு பில்லியன் டொலர் சர்வதேச இறையாண்மை பிணை முறிகள் உட்பட இந்த ஆண்டில் 4 பில்லியன் டொலர் கடனை திரும்ப செலுத்த வேண்டியுள்ளது.
நெருக்கடியில் இருந்து மீள வழியை தேடுவதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அடுத்த மாதம் வொஷிங்டன் சென்று சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
உலக வங்கியிடம் கோரியுள்ள நிதியுதவி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை, தமக்கு வரவு செலவுக்கான உதவியே தேவை எனக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை உலக வங்கியிடம் இருந்து பெறக் கூடிய கடன் தொகை தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை. உலக வங்கி சாதாரணமாக ஏற்றுமதிகளை அதிகரிப்பது, பொருளாதார போட்டி தன்மை அதிகரிப்பது மற்றும் வளர்ச்சிக்கான நிதியுதவியை வழங்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக பாரியளவில் கடனை பெற்றுள்ள ஆர்ஜன்டீனாவுக்கு 2022 ஆம் ஆண்டில் 2 பில்லியன் டொலர் கடன் பொதிக்கான அனுமதியை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச் சூழல்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணையில் பெறும் கடன் வேலைத்திட்டத்திற்குள் இணையும் போது இப்படியான உதவிகள் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் வரவு செலவுத் திட்டத்திற்கு உதவுவது தொடர்பாக தற்போது இலங்கையுடன் பேச்சு நடத்த போவதில்லை என உலக வங்கி கூறியுள்ளது. நிரந்தர வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கு தேவையான மறுசீரமைப்புகளை அடையாளம் காண்பதற்காக இலங்கையுடன் சம்பந்தப்பட்டு செயற்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் அப்படியான உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
எனினும் இது சம்பந்தமாக இலங்கை நிதியமைச்சு தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை. சர்வதேச நாணய நிதியம் நிர்ணயிக்கும் குறிப்பிட்ட இலக்குகள், இலங்கையின் வர்த்தகம் மற்றும் நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றை பொறுத்து வழங்கும் நிதியுதவி தொகை அமையும் என பொருளாதார ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
எது எப்படி இருந்த போதிலும் இலங்கைக்கு வருடாந்தம் 3 பில்லியன் டொலர் தேவைப்படுகிறது என மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் ஒரு கால வரையறைக்குள் நிதியுதவிகளை வழங்கும் ஆறு மாதம் முதல் ஒரு வருடமாக அது இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
உலக வங்கி போன்ற நிறுவனங்களின் ஆதரவுடன் இலங்கையின் வரவு செலவுத் திட்டம் கொண்டு வரப்படலாம். சர்வதேச நாணய நிதியத்தின் உதவி திட்டங்கள், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு, மானியங்கள் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தும். இதன் காரணமாக வறிய மக்கள் பாதிக்கப்படலாம் எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
வெளிப்படையாக எரிசக்தியின் விலைகள் நிர்ணயம் செய்யப்படலாம் என்பதுடன் எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.