பாடசாலை பேருந்தை தவறவிட்ட அக்காவையும் தங்கையையும் பாடசாலையில் இறக்கி விடுவதாக கூறி ஆட்டோவுக்குள் ஏற்றிச்சென்று , அக்காவை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற ஆட்டோ ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீரிகம ஹல்பே பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவிகள் இருவர் கடந்த 21ஆம் திகதி காலை நகரிலுள்ள பாடசாலைக்கு செல்வதற்கு பேருந்து தரிப்பிடத்தில் நின்றனர்.
இதன்போது வழமையாக வரும் பேருந்தில் அவர்களால் ஏற முடியாமல் போய்விட்டது. இதையடுத்து பின்னால் வந்த ஆட்டோ சாரதி, ஆட்டோவில் ஏறுங்கள், நான் பாடசாலையில் விட்டுவிடுகிறேன் எனக்கூறி மாணவிகள் இருவரையும் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.
அதன் பின்னர் தங்கையை பாலர் பாடசாலையில் இறக்கிவிட்டு 14 வயதான அக்காவை அவரது பாடசாலையில் இறக்கி விடுவதாக கூறி ஆள் அரவமற்ற இடத்தில் மாணவியை அச்சுறுத்தி துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்துள்ளார்.
அப்போது அந்த மாணவி புத்தகப்பையால் அந்த நபரை தாக்கிவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து மாணவியை கடத்திச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை மீரிகம பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.