ஆபத்தான இடத்தில் குளிக்கச் சென்ற மாணவர்கள் சிலரை அவதானித்த கிராமவாசிகள் சிலர் அவர்களை தடுத்து நிறுத்தி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவமொன்று கம்பஹா, தரலுவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
இன்று காலை கொழும்பு பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சிலர் பாடசாலை சீருடையில் குளிப்பதற்கு கம்பஹா தரலுவ அணைக்கட்டுக்கு சென்றுள்ளனர்.
பாடசாலை சீருடையில் இருந்த மாணவர்கள் குறித்து கிராமத்தவர்கள் தொடர்ந்தும் அவதானித்து வந்துள்ளனர். குறிப்பாக கடந்த வாரம் தரலுவ பகுதியில் குளிக்க முயன்ற பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இது குறித்து மாணவர்களிடம் தெரிவித்த பெரியவர் ஒருவர், அங்கு நீராட செல்ல வேண்டாம் என கூறியிருந்தார்.
பின்னர், கிராமவாசிகள் சிலர் அங்கு திரண்டு வந்து மாணவர்களை மடக்கிப்பிடித்ததையடுத்து, இரண்டு மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
கிராமவாசிகளால் பிடிக்கப்பட்ட மாணவர்கள் இருவரும் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து குறித்த பகுதியில் பாடசாலை சீருடையில் இருந்த ஏனைய மாணவர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மாணவர்கள் கொழும்பில் இருந்து குறித்த பகுதிக்கு குளிப்பதற்கு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.