பணம் அச்சிடப்படுவதை உடனடியாக குறைக்க வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் பொருளாதார விஞ்ஞானம் தொடர்பில் போதிய புரிதல் இல்லாத மிகவும் பலவீனமான நாடாளுமன்றத்தை தான் கண்டதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
பணத்தை அச்சிட்டு வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் மத்தியில் ஏன் பகிர்ந்தளிக்கக் கூடாது என்று கூறும் நபர்களும் நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர் எனவும் பந்துல குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
அப்படி செய்தால், நாட்டின் முழுப் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைமைக்கு செல்லும் என்பது இவர்களுக்கு புரியவில்லை. இந்த நிலைமையை புரிந்துக்கொண்டு பணம் அச்சிடப்படுவதை கட்டுப்படுத்த நாடாளுமன்றம் தலையிட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கி குறுகிய காலத்தில் சுமார் இரண்டு பில்லியன் ரூபாய் பெறுமதியான நாணயங்களை அச்சிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதன் காரணமாக நாட்டின் பணவீக்கம் அதிகரித்து, பொருட்களின் விலைகள் பல மடங்காக அதிகரித்துள்ளதாக பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்