எல்லே புகையிரத நிலையத்திலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த போது தவறவிட்டப்பட்ட மடிகணிணி மற்றும் பயணப் பொதி ஜேர்மன் நாட்டு பிரஜையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக குறித்த உல்லாசப் பிரயாணியான ஜேர்மன் நாட்டு பிரஜை எல்லே புகையிரத நிலையத்திலிருந்து நுவரெலியா செல்வதற்கு புகையிரதத்தில் நானுஓயா நோக்கி பயணித்துள்ளார்.
இந்நிலையில், உல்லாசப் பிரயாணி நுவரெலியாவில் தான் தங்கும் ஹோட்டலில் தமது குழுவினருடன் தங்குவதற்கு ஆயத்தமானபோது தனது நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான மடிகணிணியும் , பயணப்பொதியும் புகையிரதத்தில் தவறவிட்டமை தெரிய வந்துள்ளது. உடனடியாக ஹோட்டல் ஊழியர் ஒருவரது உதவியோடு கண்டி சுற்றுலா பொலிஸாருக்கு அறிவித்ததனை தொடர்ந்து பொலிஸார் நாவலப்பிட்டி புகையிரத நிலைய அதிபருக்கு இவ்விடயத்தை தெரியப்படுத்தினார்.
நாவலப்பிட்டி புகையிரத நிலைய அதிபர் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரத்தினுள் சோதனையிட்ட போது உல்லாசப் பிரயாணி தொலைத்த அவரது உடமைகள் கண்டு பிடிக்கப்பட்டு உரியவரான ஜேர்மன் நாட்டு பிரஜையான டேவிட் பென்ஜமினி(David Benjamin)டம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.