நாட்டு மக்கள் தற்பொழுது மிக அதிகமாக ஒரு பாடலை விரும்பி கேட்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
இந்த நாட்களில் மக்கள் வேலை செய்யும் எம் வீரன் என்ற பாடலையே மக்கள் அதிகம் கேட்கின்றனர். நான் நினைக்கவில்லை, யொஹானியின் மெனிகே மகே ஹித்தே பாடலை விடவும் இந்தப் பாடல் பிரபல்யமடைந்துள்ளது.
மக்கள் வரிசையில் காத்திருக்கும் போதே கூடுதலாக இந்தப் பாடலை கேட்கின்றனர். இவ்வாறு பாடலை கேட்பவர்களை புலனாய்வுப் பிரிவினர் தேடிச் செல்கின்றனர். இலங்கையில் இதற்கு முன்னர் இவ்வாறு நடந்ததில்லை.
பாடல் ஒன்றை கேட்டதற்காக புலனாய்வுப் பிரிவு தேடியதில்லை. இந்தப் பாடலை கேட்டால் புலனாய்வுப் பிரிவினர் சென்று ஏன் பாடலை கேட்டீர்கள் எதற்காக, ஜனாதிபதியை இழிவுபடுத்தவே கேட்டீர்கள் என வீடு தேடிச் சென்று விசாரணை நடத்துகின்றனர்.
69 லட்சம் வாக்கு பெற்றுக்கொள்ள அந்தக் காலத்தில் இந்தப் பாடல் எந்தநாளும் இசைக்கப்பட்டது. இந்தப் பாடலை மக்கள் தற்பொழுது அதிகம் கேட்கின்றனர்.
அதிகாலை, நள்ளிரவு என நேர வேறுபாடின்றி இந்தப் பாடலை மக்கள் கேட்கின்றனர் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வேலை செய்யும் எமது வீரன் என்ற பாடல் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரச்சாரப் பாடலாக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.