நாட்டில் உண்மையான எரிபொருள் நெருக்கடி ஏற்படவில்லை எனவும், சில முறையற்ற தகவல் பரவல் காரணமாக செயற்கையான இந்த நெருக்கடி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
துறைமுகத்தில் எரிபொருள் கப்பல்கள் நிறுத்தப்பட்டதாகவும், இறக்குதல் மற்றும் விநியோகம் மட்டுமே எஞ்சியுள்ளது என்றும் அவர் கூறினார். கடந்த காலங்களில் 24 மணித்தியாலங்களுக்கு மட்டுமே எரிபொருள் கிடைக்கும் காலங்கள் இருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
133 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட நாரம்மல பிரதேச சபையின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்விடயங்களை தெரிவித்தார்.
3 அல்லது 4 நாட்களுக்கு மட்டுமே எரிபொருள் கிடைக்கும் என்று பொதுமக்களிடம் தெரிவித்தால், மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த தேவையற்ற தகவல் தொடர்புகளால் மட்டுமே மக்கள் அச்சமடைந்து வரிசைகள் உருவாகத் தொடங்கினர்” என்று அவர் கூறினார்.
அரசியல் விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் இந்த தேவையற்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தற்போது நிலைமை மாறியுள்ளதாகவும், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஸ தெளிவாக கருத்து வௌியிட்டு, தமது நாட்டை ஒரு பாதையில் பயணிக்க செய்து, அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், அரசியல்வாதிகள் போதிய தௌிவில்லாமல் சில விடயங்களை முன்வைக்கின்ற போது மக்கள் குழப்பமடைவதாக குறிப்பிட்டார்.