திருச்சியில் முறையற்ற தொடர்பிலிருந்த பெண்ணை சந்திப்பதற்காக ஆட்டுக் கிடா இரத்தத்தை வீடு முழுவதும் தெளித்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவர் அந்த பகுதியில் தனக்குச் சொந்தமான வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு வெளியூரில் வசித்து வந்தார். தேவராஜ் வீட்டின் முதல் தளத்தில் அதே பகுதியில் பேக்கரி கடை நடத்தி வரும் ஒருவர் மனைவி மற்றும் குடும்பத்தாருடன் வசித்து வந்தார். இந்நிலையில் தேவராஜுக்கு நேற்று மர்ம நபர் ஒருவர் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு உங்கள் வீட்டில் வாடகைக்கு வசித்துவந்த 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இதனால் பதற்றமடைந்த தேவராஜ் உடனடியாக ஸ்ரீரங்கம் பொலிசாருக்கு தகவல் கொடுத்தார். பொலிசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்பொழுது சம்பந்தப்பட்ட வீட்டின் அறை முழுவதும் ரத்தம் சிதறி கிடந்தது. ஆனால் கொலையானதாகக் கூறப்பட்டவர்களின் சடலங்களைக் காணவில்லை. ஒருவேளை கொலையாளி சடலங்களை வெளியே எடுத்து சென்றிருக்கலாம் என யூகித்த பொலிசார் இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது அங்கு வந்த துரைபாலன் என்ற இளைஞர் ´தான் அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நண்பன்´ என்று கூறியதோடு தனக்கும் அப்படி ஒரு மர்ம போன் கால் வந்ததாக கூறியுள்ளான்.
தேவராஜ் மற்றும் துரைபாலனுக்கு அழைப்பு வந்த போன் நம்பரை வைத்து பொலிசார் நடத்திய விசாரணையில் கொலை நிகழ்ந்ததாகத் தகவல் சொன்னது துரைபாலன்தான் என்பது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த பொலிசார் துரைபாலனை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தது.
தேவராஜ் வீட்டின் முதல் தளத்தில் வசித்து வந்த 25 வயது இளைஞர் தனது முறைப்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் நடத்திவரும் பேக்கரி கடையில் வேலை செய்து வந்த துரைபாலன் என்ற இளைஞருக்கும் பேக்கரி உரிமையாளர் மனைவிக்கும் இடையே முறையற்ற தொடர்பு இருந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து மனைவியிடம் சண்டையிட்டு வந்த பேக்கரி உரிமையாளர் ஒரு கட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சொல்லிக்கொள்ளாமல் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டார்.
இதனால் முறையற்ற தொடர்பிலிருந்த துரைபாலன் அந்த பெண் எங்கு இருக்கிறார் என தெரியாமல் மதுபோதையில் சுற்றி திரிந்துள்ளார். இந்நிலையில் அந்த வீட்டில் கொலை நிகழ்ந்ததாகத் தகவல் பரப்பினால் பொலிசார் விசாரிப்பார்கள். அப்பொழுது அந்த பெண்ணை கண்டுபிடித்து விடலாம் என திட்டமிட்ட துரைபாலன், அருகில் உள்ள இறைச்சி கடைக்கு சென்று ஆட்டுக்கிடா ரத்தத்தை பாலிதீன் கவரில் வாங்கி வந்து கொலை நிகழ்ந்தது போல் வீடு முழுவதும் ரத்தத்தைத் தெளித்துவிட்டு, பின்னர் வீட்டு உரிமையாளருக்குக் கொலை நிகழ்ந்ததாக தொலைப்பேசியில் கூறியுள்ளது தெரியவந்தது.