மன்னார் – திருக்கேதீஸ்வரம் பகுதியில் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் யுத்த காலத்தில் அழிக்கப்பட்ட யாத்திரிகள் தங்கும் இடம் மீள அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த யாத்திரிகள் தங்கும் இடம் அமைக்கும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டாம் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மாந்தை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் கிராம மக்கள் ஒன்றிணைந்து நேற்று மன்னாரில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர்.
திருக்கேதீஸ்வர ஆலய வீதியில் பொதுமக்கள் மற்றும் யாத்திரிகளின் நன்மை கருதி உரிய அனுமதியுடன் அமைக்கப்பட்டு வந்த குறித்த தங்குமிடத்தின் பணிகள் அண்மையில் எள்ளுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த சில மக்களின் எதிர்ப்பால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் குறித்த யாத்திரிகள் தங்குமிடம் சட்ட ரீதியாக அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டு அமைக்கப்பட்டு வருவதுடன், குறித்த பகுதியில் யுத்தத்திற்கு முன்னர் யாத்திரிகர் மடம் ஒன்று காணப்பட்டதாகவும் யுத்தத்தின் போது அழிவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது கிராம மக்கள் இணைந்து அப்பகுதி மக்களின் நன்மை கருதியும், அதே நேரத்தில் மத வழிபாடுகளுக்கு வரும் யாத்திரிகர்களின் நன்மை கருதியும், குறித்த யாத்திரிகர் தங்குமிடம் மீண்டும் அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு பணிகள் இடம்பெற்று வருகின்றது.
அனைத்து தரப்பினருடைய முழுமையான அனுமதியைப் பெற்றுக் கொண்டு குறித்த பணிகள் இடம்பெற்று வருகின்ற போதும் எள்ளுப்பிட்டி மக்கள் சிலரது எதிர்ப்பால் குறித்த பணிகள் இடைநிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே குறித்த அபிவிருத்தி பணியைத் தடுக்க எவருக்கும் உரிமை இல்லை என்பதை தெரிவித்துள்ளதோடு, இவ்வாறான இடையூறுகளை ஏற்படுத்த இடமளிக்க வேண்டாம் என திருக்கேதீஸ்வர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கேதீஸ்வரம் கிராம அபிவிருத்திச் சங்கம், சிவபுரம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவை இணைந்து குறித்த கிராம மக்களுடன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் இறுதியாக மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் ஆகியோருக்கு தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்துள்ளதோடு, தமக்கான உரிய தீர்வை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த மன்னார் பிரதேசச் செயலாளர், குறித்த பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையில் முரண்பாடான நிலை நீடித்து வருகின்றமையினால் எதிர்வரும் சிவராத்திரி நிகழ்வு நிறைவடைந்த பின்னர் இரு கிராம பிரதிநிதிகளையும் அழைத்து இணக்கப்பாடான கலந்துரையாடல் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு பெற்றுத் தருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக மக்களிடம் கூறியுள்ளார்.