ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக வெளியாகி வரும் தகவல்களை ஐக்கிய தேசியக்கட்சி மறுத்துள்ளது.
எனினும் தேர்தல் கூட்டணி ஒன்று தொடர்பான செய்தி தொடர்பில் அந்த கட்சி மறுப்பு எதனையும் வெளியிடவில்லை.
ரணில் விக்கிரமசிங்க, கோட்டாபய ராஜபக்சவுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இதற்கு ரணிலின் மருமகளான இஷானி விக்கிரமசிங்க, உதவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ள ஐக்கிய தேசியக்கட்சி தரப்பு, இஷானி விக்கிரமசிங்கவின் ஊடாக இரகசிய பேச்சுக்கள் எவையும் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளது.
இதேவேளை முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஆகியோர், ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து கூட்டணி ஒன்றை, அமைப்பதற்கான முன்னெடுப்புக்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற தகவல் பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கூட்டணி தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் சம்பிக்க ரணவக்க தொடர்பு கொண்டபோதும் அவர் உரிய பதில்களை வழங்காத நிலையில் இந்த கூட்டணி தொடர்பான முன்னெடுப்புக்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.