ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரில் கலந்துக்கொள்ளும் இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கு வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் (G.L.Peiris) தலைமை தாங்கவுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை 28-02-2022 ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை நடைப்பெறவுள்ளது.
இலங்கை தொடர்பிலான கூட்டத்தொடர் மார்ச் மாதம் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 49 ஆவது கூட்டத்தொடர்பில் கலந்துக்கொள்ள வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், (G.L.Peiris) நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி (Ali Sabry) உட்பட விசேட பிரதிநிதிகள் குழுவினர் ஜெனிவா செல்லவுள்ளனர்.
இந்த பிரதிநிதிகள் குழுவிற்கு வெளிவிவகாரத்துறை அமைச்சர் தலைமை தாங்குவார். இவ்விஜயத்தின் போது வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் 49ஆவது அமர்வின் உயர்மட்ட பிரிவில் உரையாற்றுவார். அதனை தொடர்ந்து இடம்பெறவுள்ள இலங்கை தொடர்பான உரையாடலிலும் அவர் பங்குப்பற்றுவார்.
அத்துடன் வெளிவிவகாரத்துறை அமைச்சர் இவ்விஜயத்தின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் உட்பட முக்கிய தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் இடம்பெறவுள்ளதாக அறிய முடிகிறது.
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதாரம் மற்றும் சமூக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து நேரடி களவிஜயத்தை மேற்கொள்ளுமாறு வெளிவிவகாரத்துறை அமைச்சர் சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்தவுள்ளார்.