புனித பூமியாக நயினாதீவு ரஜமஹா விகாரையை பிரகடனப்படுத்தும் சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வினை எதிர்வரும் மார்ச் மாதம் நடத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை (11-02-2022) இடம்பெற்றுள்ளது.
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் புனித பூமி மற்றும் தொல்லியல் தலங்களில் தற்போது நிலவும் பிரச்சினைகளை தீர்த்து அவற்றிலுள்ள கல்வெட்டுகளை எதிர்கால தலைமுறையினருக்காக பாதுகாக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த இதன்போது வலியுறுத்தினார்.
நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற அகில இலங்கை சாசனாரக்ஷக சபையின் கலந்துரையாடலின் போது பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கினார்.
அகில இலங்கை இலங்கை சாசனாரக்ஷக சபையில் தற்போது நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமரின் செயலாளர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை தெரிவித்தார்.
அறநெறி பாடசாலை கொடி தினம், அறநெறி பாடசாலை தின தேசிய நிகழ்வு மற்றும் அறநெறி பாடசாலை மாணவர்களின் திறமைக்கான தேசிய நிகழ்வு ஆகியவற்றை நடத்துவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அறநெறி பாடசாலை புத்தகங்களை விநியோகிப்பதற்கான போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு மாவட்ட செயலாளர்களின் உதவியை பெற்றுக் கொள்ளுமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.
அகில இலங்கை சாசனாரக்ஷக சபையை பிரதிநிதித்துவப்படுத்தி பேராசிரியர் தும்புல்லே சீலக்கண்ட தலைமை தேரர், முகுனுவெல அனுருத்த தலைமை தேரர், மெதகம தம்மானந்த தேரர், மெதகமுவே விஜய மைத்திரி அனுநாயக்க தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் இதன்போது கலந்து கொண்டனர்.
மேலும் பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதமரின் மேலதிக செயலாளர் திரு.நிசாந்த வீரசிங்க மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.