கடந்த 23.12.2021 கிளிநொச்சி கண்டாவளை கல்வி கோட்டத்தில் உள்ள தர்மபுரம் இல.1 ஆரம்ப பாடசலையில் ஒரு இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த மருத்துவ முகாமில் மாணவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 71 மாணவர்களுக்கு பார்வை பிரச்சினை இருப்பதாக பரிசோதனை மேற்கொண்ட தனியார் நிறுவனம் ஒன்று அறிவித்தது. இதுவே தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
பாடசாலையில் கண் பரிசோதனை நடந்ததன் பின்னணி
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் ஒரு உயரதிகாரி மற்றும் கலாச்சார உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் தர்மபுரம் பிரதேசத்தில் கலைஞர்கள், மதகுருமார்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் ஒன்று இடம்பெற்ற போது அதில் மேற்குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது தங்களுடைய பாடசாலையிலும் சில மாணவர்களுக்கு பார்வை பிரச்சினை இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்க ‘அப்படியென்றால் உங்களது பாடசாலையிலும் இலவச கண் பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யலாம்’ எனத் தெரிவித்து மாவட்ட செயலக அதிகாரிகள் தங்களுடைய தொலைபேசி இலக்கத்தை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளனர்.
அந்த ஆசிரியர்கள் அதற்கு மறுநாள் பாடசாலையில் நடந்த காலைப் பிரார்த்தனையின் போது அதிபரிடம் விடயத்தை கூறியுள்ளனர்.
அதிபரும் ‘கடந்த இரண்டு வருடங்களாக பாடசாலையில் சுகாதாரத் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படும் வழக்கமான பாடசாலை வைத்திய பரிசோதனைகள் நடைபெறாமையாலும், சில மாணவர்களது கண்பார்வை குறித்த சந்தேகம் ஆசிரியர்களால் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தமையாலும், மாணவர்களின் நலன் கருதி இலவச கண் பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்கலாம்’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
அதன் பின்னரே ஆசிரியரிடம் இருந்து கலாச்சார உத்தியோகத்தரின் தொலைபேசி இலக்கத்தை பெற்று கலாச்சார உத்தியோகத்தரிடம் அதிபர் இலவச கண்பரிசோதனை தொடர்பாக உரையாடியுள்ளார்.
இதன்போது ‘பாடசாலையில் இலவசமாக கண் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்’ என்றும் ‘பாடசாலை எவ்வித செலவு செய்யத தேவையில்லை’ என்றும் ‘பரிசோதனை முடிவில் கண்ணாடி பயன்படுத்த வேணடும் என்று சிபாரிசு செய்யப்படுகின்ற மாணவர்களுக்கும் இலவசமாக கண்ணாடி பெற்றுக் கொள்ள புலம்பெயர் நாட்டில் உள்ள ஒருவர் உதவ தயாராக இருப்பதாகவும் அவரின் பெயரை கூட அவர் வெளியிட விரும்பவில்லை’ என்றும் தெரிவித்த கலாச்சார உத்தியோகத்தர் பாடசாலை கண் பரிசோதனைக்கான திகதியினை தருமாறு அதிபரைக் கேட்டுள்ளார்.
இவ் விடயத்தினை அதிபர் தமது திணைக்களத் தலைவருக்கு தொலைபேசியில் அறிவித்த போது ‘மாணவர்கள் நன்மையடைவதால் இதனைச் செய்வதில் ஆட்சேபனை இல்லை. எழுத்து மூலம் தெரியப்படுத்திவிட்டு செய்யுங்கள்’ என்ற பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி எழுத்துமூல அறிவித்தலை மேலதிகாரிகளுக்கு வழங்கிய பின்னர் கலாச்சார உத்தியோத்தரை தொடர்பு கொண்ட அதிபர் மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்வதற்குரிய திகதியை வழங்கியுள்ளார்.
அப்போது ‘குறித்த திகதியில் கண் பரிசோதனை செய்ய வருபவர்களுக்குரிய உணவினை வழங்கினால் போதுமானது.வேறு எந்தக் கட்டணமும் செலுத்த தேவையில்லை’ என்று அதிபருக்கு கலாச்சார உத்தியோகத்தரால் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்தே 23.12.2021 வியாழக்கிழமை தர்மபுரம் இல.1 பாடசாலையில் கண் பரிசோதனை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பிறவுன் வீதி மற்றும் கிளிநொச்சி நகரில் உள்ள ஒரு பாடசாலையின் முன்பாக தனது கிளைகளை வைத்துள்ள தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த மூவர் இதற்காக குறித்த பாடசாலைக்கு வருகை தந்திருந்தனர் (இவர்கள் கண் வைத்தியர்கள் அல்லர்) பரிசோதனையும் இடம்பெற்றது.
முடிவில் 71 மாணவர்களுக்கு கண்களில் பாதிப்பு உள்ளது என்றும் இவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணத்தில் உள்ள தங்களுடைய நிறுவனத்திற்கு மேற்பரிசோதனைக்காக வருமாறு பரிந்துரைத்தனர்.
அப்போது ‘பிள்ளைகள் அவ்வாறு இங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருவது சாத்தியம் அல்ல. அவர்களால் வரமுடியாது’ என அதிபரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து பிடித்து யாழ்ப்பாணம் சென்ற பெற்றோர்களும், பிள்ளைகளும்
பின்னாளில் பாடசாலையில் நடந்த பெற்றோர் சந்திப்பு ஒன்றின்போது சில பெற்றோர்களால் ‘பேருந்து ஒன்றினை ஒழுங்குபடுத்தி தந்தால் தாம் தமது பிள்ளைகளை மேற்பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் கொண்டு சென்று வர முடியும்’ என்ற கோரிக்கை அதிபரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் ‘பிள்ளைகளிடம் இருந்து எதுவித கட்டணமும் அறவிடக் கூடாது. கட்டணம் தேவை எனில் சுரக்சா காப்புறுதி ஊடாக பாடசாலை மூலம் விண்ணப்பித்து அதனைச் செலுத்த முடியும்’ எனச் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்திய பின்னரே அதிபர் பேருந்தில் பிள்ளைகளை யாழ். கொண்டு செல்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
இதற்கமைவாக 25.12.2021 சனிக்கிழமை பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தலா 300 ரூபா வீதம் செலுத்தி பேருந்து ஒன்றை பிடித்து கொண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள குறித்த தனியார் கண் சிகிச்சை கண்ணாடி விற்பனை நிறுவனத்திற்கு சென்றனர்.
அங்கு மாணவர்களுக்கு மேலதிக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் 10 மாணவர்களுக்கு கண்ணில் பிரச்சினை இல்லை எனறும் அவர்கள் கண்ணுக்கான பயிற்சிகள் செய்தால் போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டதோடு, ஏனைய 61 மாணவர்களும் கண்ணாடி பயன்படுத்த வேண்டும் என்றும் குறித்த நிறுவனத்தினர் தெரிவித்து அந்த 61 மாணவர்களிடமும் கண்ணாடிகளுக்கான முற்பணம் கோரியுள்ளனர்.
வசதிவாய்ப்பற்ற குறித்த பெற்றோர்களால் அன்றைய தினமே தங்கள் பிள்ளைகளுக்கான மூக்கு கண்ணாடிகளுக்குரிய முற்பணத்தை செலுத்த பணம் இருந்திருக்கவில்லை. ஆனால் ஒரு சில வசதிபடைத்த பெற்றோர்கள் பணத்தை செலுத்தியிருந்தனர்.
பெற்றோரது கருத்தின்படி அக் கண்ணாடிகளது விலைகள் வழமையான சந்தை விலைகளை விட அதிகமாக இருந்தன. இந்த நிலையில் அதிபரை தொடர்பு கொண்ட குறித்த நிறுவனத்தினர் பிள்ளைகளுக்கு கண்ணாடிகள் வழங்குவதற்காக முற்பணம் செலுத்துமாறு கோரியுள்ளனர்.
அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த அதிபர் ‘எல்லாப் பெற்றோர்களும் பணத்துடன் வரவில்லை. அனைத்துப் பெற்றோர்களும் வசதிபடைத்தவர்களும் அல்லர்.
எனவே எந்தப் பெற்றோராவது தாமாக முன்வந்து முற்பணம் தந்தால் பெற்றுக் கொள்ளுங்கள். மிகுதி பிள்ளைகளுக்கு நானே பொறுப்பாளி’ எனத் தெரிவித்துள்ளார்.
சந்தேகமடைந்த ஊடகவியலாளர்
மேற்படி சம்பவத்தில் தொடர்புபட்ட பெற்றோர் ஒருவர் கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவருடன் தொடர்பு கொண்டு ‘தன்னுடைய பிள்ளை வழமை போன்று வாசிப்பு தொடக்கம் எல்லாப் பணிகளையும் மேற்கொள்வதாகவும் ஆனால் பார்வைப் பிரச்சினை உண்டு.
கண்ணாடி பாவிக்க வேண்டும்’ என்று ஆலோசனை தரப்பட்டுள்ளதுடன், ‘தன்னுடைய பிள்ளையை போன்று அதே பாடசாலையில் பயிலும் 61 பிள்ளைகள் கண்ணாடி பாவிக்க வேண்டும்’ என்றும் பாடசாலை கண் வைத்திய பரிசோதனையின் பின்னர் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதே காலப்பகுதியில் ‘கிளிநொச்சியில் ஒரே பாடசாலையில் 71 மாணவர்களுக்கு கண்பார்வை யில் குறைபாடு’ என அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிலும் செய்திகள் வெளிவர குறித்த ஊடகவியலாளர் உசாரடைந்து வைத்தியர் ஒருவரைத் தொடர்பு கொண்டு இந்த விடயம் குறித்த உரையாடியிருக்கின்றார்.
அந்த வைத்தியர் ‘இந்த எண்ணிக்கை உண்மையாயின் இதுவொரு அனர்த்தம், அபாய அறிகுறி. எனவே இந்த விடயத்தை ஆழமாக ஆராய வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.
இதன் பின்னர் அதிபருடன் குறித்த ஊடகவியலாளர் தொடர்பு கொண்டு ‘கண் பரிசோதனையை மேற்கொண்டவர்கள் யார்?’ என வினவிய போது சந்தேகம் மேலும் வலுவடையத்தொடங்கியிருக்கிறது.
அதனையடுத்து சம்பந்தப்பட்ட 71 மாணவர்களின் கணிசமான பெற்றோர்களுடன் தொடர்பு கொண்டு ஊடகவியலாளர் பேசிய போது கிடைத்த தகவல்கள் அவருக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மருத்துவ அதிகாரிகளை தொடர்பு கொள்ளல்
இறுதியாக கண்டாவளை உதவி சுகாதார வைத்திய அதிகாரியான (AMOH) மருத்துவர் பிரியந்தினி கமலசிங்கத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்த ஊடகவியலாளர் ‘தங்கள் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட கண் பரிசோதனையில் 71 மாணவர்களுக்கு பிரச்சினை உள்ளது’ என வெளியாகியுள்ள செய்திகள் உண்மையா? அதுபற்றிய மேலதிக விபரங்கள் தெரிவிப்பீர்களா?’ என்று வினவியுள்ளார்.
‘தான் பயிற்சி ஒன்றின் காரணமாக களுத்துறையில் நிற்பதாகவும் தன்னுடைய அலுவலகத்தில் இது தொடர்பில் எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை என்றும் அறிவித்தல் கூட வழங்கவில்லை’ என்றும் தெரிவித்த அவர் தனக்கு ‘இது தொடர்பில் வேறு எதுவும் தெரியாது’ என்றும் பதிலளித்துள்ளார்.
இந்த நிலையில் அப்போது கண்டாவளையில் சுகாதார வைத்திய அதிகாரியாகப் பதில் கடமையாற்றிய கிளிநொச்சி மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதனை தொடர்பு கொண்டு வினவிய போது ‘குறித்த கண் பரிசோதனை விடயம் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்றும், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையிலும் எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை’ என தெரிவித்திருந்தார்.
ஊடகங்களில் வெளியான செய்தியும் நடவடிக்கையும்
இந்தப் புலனாய்வுத் தேடல்களின் இறுதியாகவே ‘மாணவர்களின் கண் பரிசோதனை விடயத்தில் மோசடிகள் இடம்பெற்றுள்ளது’ என்றும் ‘வியாபார நோக்கத்திற்காக கண் மருத்துவ மாபியாக்களினால் வறிய பெற்றோர்களின் பிள்ளைகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்’ என்றும் நடந்த சம்பவத்தின் உண்மை நிலைவரம் குறித்து ஊடகங்களின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டது. இது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
களத்தில் இறங்கிய மனித உரிமைகள் ஆணைக்குழு
அதிரடியாகக் களத்தில் இறங்கிய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் ஊடகங்களில் வெளிவந்த செய்தியினை சொந்த பிரேரணையாக ஏற்று உடனடியாக கிளிநொச்சி வடக்கு வலய கல்விப் பணிப்பாளரிடம் இந்த விடயம் தொடர்பில் அறிக்கை தருமாறு கோரியிருந்தது.
சுகாதார துறையினரின் நடவடிக்கை
விடயத்தின் தீவிரத் தன்மையை உணர்ந்த கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரது நேரடி மேற்பார்வையில் 71 மாணவர்களையும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை நிபுணரிடம் மீள்பரிசோதனைக்கு உள்ளாக்கத் தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைவாக அவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு கட்டம் கட்டமாக மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டு மீள்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
27.12.2021 இலிருந்து 11.01.2022 வரை நடந்த இந்த பரிசோதனைகளில் 55 மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அதிர்ச்சியை ஏற்படுத்தி மாபியாக்களை அம்பலப்படுத்திய மருத்துவ அறிக்கை
55 மாணவர்களிடம் மாவட்ட கண் சத்திர சிகிச்சை நிபுணர் மேற்கொண்ட பரிசோதனையில் 38 மாணவர்களது கண்களிலோ அல்லது பார்வைத்திறனிலோ குறிப்பிடத்தக்களவு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் ஏனைய 17 மணவர்களுக்கும் கண்ணாடிகள் அல்லது மேலதிக பரிசோதனைகள் தேவைப்படுவதாகவும் என்றும் தெரிவிக்கப்பட்டிருதது.
எனவே இந்த அறிக்கையே வறிய மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கண் மாபியா வியாபாரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. மேற்படி தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்காது விட்டிருந்தால் 10 வயதுக்குட்பட்ட 38 வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இன்று மூக்கு கண்ணாடிகளுடன் வலம் வந்திருப்பார்கள்.
அது மாத்திரமன்றி அந்த அப்பாவிப் பெற்றோர்கள் பணத்தையும் கொடுத்து தங்கள் பிள்ளைகளுக்கு நன்மைக்கு பதிலாக பாதகமான விளைவுகளையே பெற்றுக்கொடுத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும்.
எனவே தங்கள் பிள்ளைகள் இந்தளவோடு காப்பாற்ற பட்டிருப்பதனை எண்ணி அந்த பெற்றோர்க்ள இப்போது நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
பாடசாலைகளுக்கு பறந்த சுற்று நிரூபம் இந்த விடயத்தை தொடர்ந்து வடக்கு மாகாண கல்வி அமைச்சு அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரு சுற்றுநிருபத்தினை அனுப்பியுள்ளது.
அதாவது ‘பாடசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்ற மருத்துவ சிகிச்சை நடவடிக்கைளை அந்தந்த பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அல்லது மாவட்ட சுகாதார திணைக்களங்களின் அனுமதி மற்றும் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளுமாறு’ அதில் பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எது எப்படியோ விழித்து கொண்டதனால் பல மாணவச் சிறார்களது விழிகள் தப்பிக்கொண்டன.