நாட்டின் தற்போதைய பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதிக்கோ, அமைச்சரவைக்கோ போதிய புரிதல் கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற ஶ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி கூட்டமொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
சுதந்திரத்தின் பின்னர் இந்த நாடு மிக மோசமான நெருக்கடியை தற்பொழுது எதிர்நோக்கியுள்ளது.
இந்த நெருக்கடிகளுக்கு என்ன காரணம் என்பது பற்றி ஜனாதிபதிக்கோ, பிரதமருக்கோ, அமைச்சரவைக்கோ, ரணில் விக்ரமசிங்கவிற்கோ, சஜித் பிரேமதாசவிற்கோ அல்லது ஜே.வி.பி க்கோ தெரியவில்லை.
திறைசேரியில் பணம் இல்லாத பிரச்சினைக்கு பணத்தை அச்சிடுவது ஒர் தீர்வாக அமையாது. அரசியல் செய்யாத ஒருவர் நன்றாக ஆட்சி செய்வார் என நான் தனிப்பட்ட ரீதியில் இந்த ஜனாதிபதி மீது அபிப்பிராயம் கொண்டிருந்தேன்.
அரசியல் செய்யாத ஒருவரினால் ஆட்சி செய்ய முடியாது. கட்டளை இட்டு இராணுவ வழிமுறைகளில் ஆட்சி செய்யவே முடியாது. அவ்வாறு செய்து அரசாங்க உத்தியோகத்தர்களை வேலை செய்ய சொல்ல முடியாது.
கொள்கை அமுலாக்கத்தில் பாரியளவில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. வரி வருமானத்தின் ஊடாக திறைசேரிக்கு பணம் வருவதனை உறுதி செய்ய வேண்டுமென டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்