மொராக்கோவில் 100 அடி கிணற்றுக்குள் விழுந்த 5 வயது சிறுவனை காப்பாற்ற கிட்டத்தட்ட 4 நாட்களாக மீட்புக் குழுவினர் போராடி வருகின்ற நிலையில் இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் Chefchaouen மாநிலத்தில் நடந்துள்ளது.
5 வயதான Rayan என்ற சிறுவன், கடந்த செவ்வாக்கிழமை (01-02-2022) மாலை 100 அடி (30 மீட்டர்) ஆழமுள்ள ஒரு ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான். குழந்தை அழும் குரல் கேட்டதையடுத்து, கிணற்றுக்குள் சிறுவன் விழுந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த மொராக்கோ மீட்புக் குழுவினர் புதன், வியாழன் என 48 மணித்தியாலங்களுக்கு மேலாக சிறுவனை செங்குத்தாக மீட்க முயற்சித்தனர்.
32 மீட்டர் ஆழம் கொண்ட குறித்த கிணறு, மேலே 45cm விட்டத்தில் இருக்கின்ற போதும் இறங்க இறங்க சுருங்கிய நிலையில் காணப்படுவதால் அதன் காரணமாக குழந்தையை மீட்க மீட்பவர்கள் கீழே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
மேலும், அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால், இன்று வெள்ளிக்கிழமை (04-02-2022) கிணற்றின் பக்கவாட்டில் பிரம்மாண்ட இயந்திரங்களைக் கொண்டு, நேராக சிறுவன் இருக்கும் தூரம் வரை பாரிய பள்ளத்தை தோண்டி வருகின்றனர். தற்போதைய நிலையில், பக்கவாட்டில் கிணறு தோன்றும் திட்டத்தின்படி, கிட்டத்தட்ட சிறுவனை நெருங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்தில் ராயல் ஜெண்டர்மேரியில் இருந்து ஒரு மருத்துவ ஹெலிகாப்டர் மற்றும் சுகாதார அமைச்சின் மறுமலர்ச்சியில் நிபுணர்களான மருத்துவ ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும், ஐந்து புல்டோசர்கள் சம்பவ இடத்தில் தோண்டி வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறுவன் உயிருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக இருப்பதாக கூறியுள்ளனர். மேலும், கிணற்றுக்குள் கமெரா அனுப்பப்பட்டு கண்காணிக்கப்பட்டுவரும் நிலையில், சில புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் வெளியாகியுள்ளன.
அதிகாரிகள் கிணற்றுக்கு உணவு மற்றும் தண்ணீரை அனுப்பியதாகவும், தனது மகன் சிறிது தண்ணீர் குடிப்பதை மேலிருந்து வீடியோவில் கண்டதாகவும் சிறுவனின் தந்தை கூறியுள்ளார்.