ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவின் மீது முட்டை தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு, எவான்காட் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதியின் பாதுகாப்பு நிறுவனமே காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றை இன்று நடத்திய அவர், சேனாதிபதியின் பாதுகாப்பு நிறுவனமே, கொழும்பு கோட்டையில் அண்மையில் ஜேவிபியின் போராட்டம் மீது தாக்குதல் நடத்தியமைக்கும் பொறுப்பாக இருந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
நிசங்க சேனாதிபதி, ஜனாதிபதி கோட்டாபயவின் நம்பிக்கைக்குரியவர் என்பதால், இது அரசியல் நோக்க தாக்குதல் என்று விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் இரண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி கைது செய்யப்பட்டுள்ள இருவர் தாம், தாக்குதலுக்காக 5000 ரூபா வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளதாகவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான வெறுக்கத்தக்க நடவடிக்கையை மேற்கொள்பவர்கள், கொள்கைகளுக்கு முகம்கொடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனுரகுமார திசாநாயக்கவின் மீது நேற்று கம்பஹாவில் வைத்து முட்டை வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னதாக கடந்த வாரம் கொழும்பு கோட்டையில் வைத்தும் முட்டை வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
நடைமுறை அரசியல் பிரச்சினைகளுக்கு மத்தியில் ஜேவிபி மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.