நாராஹென்பிட்டி அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் 83 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அந்த விகாரையில் புண்ணிய தானம் நடைபெற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் கலந்துக்கொண்ட இந்த புண்ணிய தானத்தில் தானம் பரிமாறும் போது நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவை அடிப்படையாக கொண்டு சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
தானத்தில் கலந்துக்கொண்ட பிக்குமாருக்கு வெள்ளரிக்காய் சாலட்டை பரிமாறிய டயனா கமகே, “ நான் சூடாக பேசினாலும் குளிரூட்டும் உணவை பரிமாறுவேன்” எனக் கூறியுள்ளார்.
அப்போது பிக்கு ஒருவர் “நீங்கள் கஞ்சாவை ஊட்டப் பார்க்கின்றீர்கள்” எனக் கூறியுள்ளார். இதன் பின்னர் வெள்ளரிக்காய் சாலடை பெற்றுக்கொண்ட அனைத்து பிக்குமாறும் டயனா கமகேவின் கஞ்சா கதையை பகிடிக்காக கேட்டுள்ளனர்.
அப்போது பதிலளித்துள்ள டயனா கமகே, “சுவாமிகளே தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். கஞ்சாவை ஊட்டுவதற்கு அல்ல, அரச அனுசரணையில் கஞ்சாவை பயிரிட்டு அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ள முடியும். அது பற்றியே நான் பேசினேன்” எனக் கூறியுள்ளார்.
இதன் குறுகிட்ட பிக்கு ஒருவர், “ எமது சுவாமிகளுக்கும் காணிகள் இருக்கின்றன” என தெரிவித்துள்ளார். “ அப்படியானால் அதிலும் கஞ்சா பயிரிடுவோம்” என டயனா கமகே குறிப்பிட்டுள்ளார்.
இறுதியில் அங்கு வந்திருந்தவர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர், “ பிக்குமார் கஞ்சா பயிரிடுவதை எதிர்க்கின்றனரா என்று அறிந்துக்கொள்ளும் தேவை எனக்கும் இருந்தது. அவர்கள் எதிர்க்கவில்லை என்பது தெரிகிறது”என தெரிவித்துள்ளார்.