ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் செவ்வாய்கிழமை வெளியிடவுள்ள கொள்கை பிரகடனத்தின் முக்கிய அம்சமாக இன நல்லிணக்க வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கும் உறுதிமொழி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மீண்டும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பிக்கும் போது, ஜனாதிபதியின் கொள்கை அறிக்கையுடன் சம்பிரதாயப்படி திறப்பு விழா நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில், இந்த கொள்கை விளக்க உரை இடம்பெறவுள்ளது. இனப்பிரச்சனை தீர்வு திட்டமொன்றின் வரைவு பணிகளை அரச தரப்பு ஆரம்பித்துள்ளதாகவும், அனேகமாக, 13வது திருத்தம் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அண்மையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் இந்தியாவின் பிடி இறுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை அடுத்து இலங்கைக்கு நிதி மற்றும் பொருள் உதவிகளை புதுடில்லி ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த உதவிகளின் பின்னணியில், இலங்கைக்குள் வலுவான சில நகர்வுகளை இந்தியா ஆரம்பித்துள்ளது.
ஏற்கனவே, பசில் ராஜபக்ச இந்தியா சென்ற போது, இது குறித்த நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டதாகவும், அதற்கு இலங்கை அரசின் சார்பில் பசில் உடன்பாடு தெரிவித்ததாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. திருகோணமலை எண்ணெய் களஞ்சிய விவகாரம் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறுவது போன்ற நிபந்தனைகளுடன், தமிழர்களின் இனப்பிரச்சனை தீர்வும் நிபந்தனைகளில் ஒன்றாக வைக்கப்பட்டதாக ஏற்கனவே இராஜதந்திர வட்டாரங்களில் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த பின்னணியிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பை புதுடில்லிக்கு அவசரமாக இந்தியா அழைத்தது. எனினும், இரா.சம்பந்தனின் மகளின் கடவுச்சீட்டு தொலைந்து விட்டது என சாதாரணமாக சொல்லி, அந்த வாய்ப்பையே இலங்கை தமிழ் அரசு கட்சி நிராகரித்தது.
இதன் பின்னரே, தமிழீழ விடுதலை இயக்கத்தின் பின்னணியில் அனைத்து தமிழ் தரப்புக்களையும் ஒன்றுசேர்க்கும் முயற்சியை இந்தியா ஆரம்பித்தது. இந்தியாவிற்கான பயண அழைப்பை தமிழ் அரசு கட்சி நிராகரிப்பதற்கு முன்னரே, ரெலோ ஒற்றுமை முயற்சியை ஆரம்பித்திருந்தது.
எனினும், தமிழ் அரசு கட்சியின் நிராகரிப்பின் பின்னர், ரெலோவின் ஒற்றுமை முயற்சியில் இணையாமல் ‘பிகு’ பண்ணிக் கொண்டிருந்த கட்சிகளை, அங்கு செல்ல வைப்பதன் பின்னணியில் இந்தியாவே செயற்பட்டது. 13வது திருத்தம் தொடர்பில் தமிழ் தரப்பை ஓரணியில் இணைத்து, தென்னிலங்கை தரப்பையும் அதை நோக்கி தள்ள இந்தியா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு அங்கமாக, நாளை மறுநாள் (18) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்தில் ஆற்றவுள்ள கொள்கை விளக்கவுரையில், இனப்பிரச்சனை தீர்வு விவகாரத்திற்கு முக்கியத்துவமளிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.