மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் பொலிஸ் என தெரிவித்து நள்ளிரவில் வீடு ஒன்றில் முற்றுகையிட்ட கொள்ளையார்கள் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த 2 பவுண் தங்க சங்கிலியை அறுத்து எடுத்துக் கொண்டு தப்பியோடிய 3 கொள்ளையர்களை நேற்று (12) கைது செய்துள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள நரிப்புதோட்டம் பிரதேசத்தில் உள்ள குறித்த வீட்டில் திங்கட்கிழமை நள்ளிரவு 1 மணியளில் வீட்டின் நாய் குரைத்ததையடுத்து வீட்டின் உரிமையாளர் வீட்டில் இருந்து வெளியே சென்று பார்த்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டை நோக்கி 3 பேர் வருவதை கண்டு வீட்டு உரிமையாளர் மாடு குத்தும் வரவேண்டாம் என எச்சரித்துக் கொண்டிருந்தபோது சத்தம் கேட்டு மனைவியார் வெளியே வந்தபோது அங்கு கணவரை ஒருவர் துரத்திசெல்வதை கண்டு நீங்கள் யார் என கேட்டபோது கொள்ளையர்கள் தாங்கள் ஆயித்தியமலை பொலிஸார் வீட்டை சோதனையிட வேண்டும் வீட்டில் யார் உள் இருக்கின்றனர் அவர்களை வெளியே வருமாறு தெரிவித்தனர்.
அதன்போது குறித்த பெண் தனது 16 வயதுடைய தம்பியை வெளியே வா என அழைத்த நிலையில் அவரை கொள்ளையர்கள் தள்ளிவிட்டுவிட்டு அவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 3 வரும் கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இதில் ஒருவர் நரிப்பு தோட்டத்தில் திருமணம் முடித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை இன்று (13) நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது இவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.