ராகம பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றை நபர் ஒருவர் உடைத்து திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இன்று (09-01-2022) காலை 10.30 மணியளவில் ராகம ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹபாகே வீதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பல்பொருள் அங்காடியில் சிறு குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் வாசனை திரவியத்தை எடுத்துக்கொண்டு பணம் செலுத்தாமல் வெளியே வந்துள்ளார்.
பல்பொருள் அங்காடியின் அருகில் இருந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் அவரை பிடிக்க முற்பட்ட போது முச்சக்கர வண்டி சாரதியை கையில் வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளார்.
இதேவேளை, மற்றொரு குழு சந்தேக நபரை துரத்திச் சென்ற போது, யாரும் நெருங்க வேண்டாம் என்றும் அவ்வாறு செய்தால் கழுத்தை அறுத்துக் கொள்வதாக அவர் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து சந்தேக நபர் கையில் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார். குறித்த பல்பொருள் அங்காடியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தின் போது சந்தேகநபர் நோயாளர் காவு வண்டி மூலம் ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த வைத்தியர்கள் குறித்த நபர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சந்தேக நபரின் சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் நாகொல்ல, உக்குவெலவத்தை பகுதியைச் சேர்ந்த 44 வயதான ரெஜி வனசுந்தர என்பவரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, இச்சம்பவத்தில் காயமடைந்த ராகம பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதான தினுக லக்ஷான் பீரிஸ் என்னும் முச்சக்கர வண்டியின் சாரதி ராகம வைத்தியசாலையின் விபத்துப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.