எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச வடக்கிற்கான தனது பயணத்தினை மேற்கொண்டு வடக்கில் மக்கள் சந்திப்புக்களை நடத்தி வரும் நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
நயினாதீவுக்கு விஜயம் செய்த சஜித் பிரேமதாச நாகவிகாரைக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டு விகாராதிபதியிடம் ஆசிகளை பெற்றுக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திலும் விசேட வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, சஜித் பிரேமதாசவின் மனைவி ஜெலனி பிரேமதாச, மாத்தறை நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, உமாச்சந்திர பிரகாஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர் .
நாளை முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பயணத்தினை மேற்கொண்டு மக்கள் சந்திப்பு மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
புதுக்குடியிருப்பு வேணாவில் கிராமத்தில் நாளை காலை பாரிய மக்கள் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றும், மாலை வற்றாப்பளை மகா வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை ஒன்றினை கையளிக்கும் நிகழ்விலும் கலந்துகொள்ளவுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதான அமைப்பாளர் லக்ஷயன் முத்துக்குமாரசாமி மற்றும் மாவட்ட அமைப்பாளர் ரிஷாம் அகியோரின் ஒழுங்கு படுத்தலில் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.