உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அறிக்கையின் பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தை விமர்சித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரையின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இராஜினாமா செய்தாலும் அடுத்த சில வருடங்களுக்கு அரசாங்கம் தொடரலாம் என அரசாங்கம் மேற்கொண்ட கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தாம் விரும்பிய எந்த தீர்மானத்தையும் எடுக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிரதான பொறுப்பு கூறும் நபராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் என்ற சந்தேகம் காரணமாக பெருந்தோட்ட கட்சிகள் மற்றும் கிழக்குக் கட்சிகளுடன் அரசாங்கம் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் எதிர்காலத்தில் இடம்பெறும் என கூறப்பட்ட அமைச்சரவை மாற்றமும் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெருந்தோட்டத்துறையில் உள்ள கட்சியொன்றுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.