தேர்தலை நடத்தும் எண்ணத்தில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவில்லை எனவும் பொருட்களின் விலை அதிகரிப்பால், மக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களை உணர்ந்து, அவற்றை கவனத்தில் கொண்டே அரசாங்கம் நிவாரணத்தை வழங்கியதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
குருணாகல் மாவத்தகமையில் நீர் வழங்கல் திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
மக்களுக்கு நிவாரணம் ஒன்றை வழங்கும் போது தேர்தல் ஒன்று நெருங்குகிறதா என கேட்கும் பழக்கம் சிலருக்கு உள்ளது. குடிநீரை வழங்கும் போது, இங்கு இருக்கும் மக்களின் கட்சி என்ன என்று எவராவது கேட்பார்களா?.
நாங்கள் அரசாங்கம் என்ற வகையில், பொருட்களின் விலைகள் அதிகரித்து, மக்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதால், நிவாரணங்களை வழங்குகிறோம்.
சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவே நாங்கள் முயற்சித்து வருகின்றோம்.
சவால்கள் வரும் போது அவற்றை ஏற்றுக்கொள்ள ஐக்கியமும் தேவைப்படுகிறது. அப்படியின்றி இருக்கும் இடத்தை விமர்சிப்பது பெருத்தமற்றது.
விமர்சிக்கும் முன்னர் ஏன் அவர்களால் செயற்பட முடியாமல் போனது என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.