வவுனியா புதுக்குளம் தேவகுளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்கு நுழைந்த 10ற்கும் மேற்பட்ட திருடர்கள் வீட்டிலுள்ளவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள், பணம் என்பனவற்றை கொள்ளையிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொள்ளை சம்பவம் நேற்று (05) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வீட்டிற்குள் சத்தமாக குரைத்துக்கொண்டிருந்த நாயினை வீட்டைத்திறந்து வெளியே விட சென்றபோது அங்கு பதுங்கியிருந்த திருடர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டிலுள்ளவர்களை தாக்கிவிட்டு அணிந்திருந்த எட்டுப்பவுண் தங்க நகைகள் உட்பட 11000 ரூபா பணம் என்பனவற்றை கத்தி முனையில் கொள்ளையிட்டு , தப்பிச்சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்து ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தில் காயமடைந்த குடும்பஸ்தவரான சிறீஸ்கந்தவாசன் 59 வயதுடைய நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவம் குறித்து தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு மோப்ப நாய் சகிதம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.