போதை பொருள் வழக்கில் கைதான சுகேஷ் வழக்கு விவகாரத்தில் அதிரடி திருப்பங்களும், புதுப்புது தகவல்களும் தினந்தோறும் வெளியாகி வருகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர்.
அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நட்பு இருப்பதாக கூறி இவர் தொழில் அதிபர்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக புகார்கள் உள்ளன.
அ.தி.மு.க. பிளவுபட்டிருந்தபோது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டி.டி.வி.தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பண மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் உள்பட 6 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில் சுகேஷ் சந்திரசேகர், இலங்கை நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ரூ. 10 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த பரிசு பொருட்களை கொடுத்தது குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதோடு சுகேஷ் சந்திரசேகர் நடிகையின் விமானம், அவரது ஓட்டல் மற்றும் உணவுக்காக பல கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறப்படுகிறது.
இதே போல கனடாவைச் சேர்ந்த மாடல் அழகியான நடிகை நோரா பதேஹிக்கும் சுகேஷுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தெரியவந்த நிலையில் நடிகையை நேரில் அழைத்து அமலாக்கத்துறையினர் விசாரித்தனர்.
இந்நிலையில், தற்போது நோரா பதேஹி அமலாக்கத்துறை தரப்பு சாட்சியாக மாறி விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கனடாவைச் சேர்ந்த மாடல் அழகியான நோரா பதேஹி அமலாக்கத்துறையினரின் விசாரணையில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதன்படி சுகேஷ் சந்திரசேகர் தனக்கு பிஎம்டபிள்யூ கார் ஒன்றையும், அவரின் மனைவியும் நடிகையுமான லீனா மரியா பால் தனக்கு விலையுயர்ந்த பேக் ஒன்றையும் பரிசளித்ததாக தெரிவித்திருக்கிறார்.
மேலும். கடந்த 2020 டிசம்பரில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்குமாறு லீனா மரியா பால் தனக்கு அழைப்பு விடுத்திருந்ததாக நடிகை நோரா தெரிவித்திருக்கிறார்.
இப்போது, நோரா பதேஹி சுகேஷ் இடையே நடைபெற்ற ரேஞ்ச் ரோவர் கார்பற்றி பேசியதும் கசிந்துள்ளது.
இதேவேளை சுகேஷ் சந்திரசேகர் தனக்கு 2015 ஆம் ஆண்டு முதல் ஷ்ரத்தா கபூரைத் தெரியும் என்றும், போதைப்பொருள் சர்ச்சைக்குப் பிறகு போதைபொருள் தடுப்பு முகமை விசாரணையின் போது அவருக்கு உதவி செய்வதாக கூறியதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இது தவிர, கணவர் ராஜ் குந்த்ரா சிறையில் இருந்தபோது ஷில்பா ஷெட்டியை அணுகியதாகவும் கூறி உள்ளார்.