இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 68 பேரை விரைவில் விடுவிப்பது தொடர்பாக இலங்கை அரசுடன் கொழும்பில் உள்ள இந்திய தூதரக உயரதிகாரிகள் பேசி வருவதாக மத்திய வெளியுறவுத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 55 மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். அவர்களின் 8 படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இந்த விவகாரம் குறித்து திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களில் தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரச்னையை எழுப்பினர். மீனவர்கள் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரி மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா ஒத்திவைப்பு தீர்மான நோட்டீûஸ செவ்வாய்க்கிழமை அளித்தார்.
இந்நிலையில், தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக இலங்கை அரசுடன் இந்திய தூதரக உயரதிகாரிகள் பேசி வருவதாக மத்திய அரசு தெரிவித்தது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த டிசம்பர் 18 முதல் 20 -ஆம் தேதி வரையிலும் தமிழகத்தைச் சேர்ந்த 68 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். அவர்களது 10 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து இந்திய அரசு கவலை கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக உயர் அதிகாரிகள், காவலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களைச் சந்தித்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான உடைகள், முகக் கவசங்கள், குளியலறைப் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளனர்.
சட்டபூர்வ வசதிகளுக்கு ஏற்பாடு: மேலும், உறவினர்களுடன் தொடர்புகொள்வதற்கான தொலைபேசி வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. தடுப்புக் காவலில் உள்ள மீனவர்களுக்கு சட்டபூர்வ வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு மீனவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரையும் இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்து நலம் விசாரித்தனர். மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை முன்கூட்டியே விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக கொழும்பில் உள்ள இந்திய உயரதிகாரிகள் இலங்கை அரசுடன் பேசி வருகின்றனர்.
தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து மனுக்கள் அளிக்கப்பட்டன.
குறிப்பாக, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவரிடம் தற்போதைய நிலைமையை எடுத்துரைத்ததோடு, மீனவர்களை விரைவாக விடுதலை செய்வதற்கு மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சி குறித்தும் வெளியுறவுத் துறை அமைச்சர் விளக்கிக் கூறினார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையமைச்சர் முருகன் கடிதம்: இதற்கிடையே, தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகன் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதினார்.