பிரிட்டனில் ஒரே நாளில் 10,059 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கூடுதலாக 10,059 பேருக்கு ஏற்பட்டுள்ள கொரோனா ஒமிக்ரோன் வகையைச் சோ்ந்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது, முந்தைய நாளில் பதிவு செய்யப்பட்ட புதிய ஒமிக்ரோன் பதிவுகளின் எண்ணிக்கையைவிட மூன்று மடங்குக்கும் மேல் அதிகமாகும்.
இத்துடன், ஒமிக்ரோன் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 24,968 ஆக உயா்ந்துள்ளது. அதுமட்டுமன்றி, அந்த வகை கொரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை திடீரென 1 இலிருந்து 7 ஆக அதிகரித்துள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 90,418 பேருக்கு அனைத்துவகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந் நோய்க்கு கூடுதலாக 125 போ் உயிரிழந்தனா். இது, முந்தைய நாளான 111 ஐவிட அதிகம் என்றாலும், கடந்த சனிக்கிழமை பதிவான 132 உயிரிழப்புகளோடு ஒப்பிடுகையில் குறைவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பிரிட்டனில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இதுவரை 11,279,428 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 147,173 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.
9,741,854 போ் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 1,390,401 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 875 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.