பிரபல திரைப்பட நடிகையின் கணவரும், நடிகருமான பகத் பாசில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பகத் பாசில், தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன், விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து வெளியான சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
மலையாள திரையுலகம் மட்டுமின்றி தன்னுடைய திறமையான நடிப்பின் மூலம் பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் பிரபல நடிகையான நஸ்ரியாவின் கணவர் ஆவார்.
இந்நிலையில் இவர் தற்போது மலையன் குஞ்சு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் கொச்சியில் நடைபெற்று வந்தது.
படத்தில் இடம்பெறவுள்ள சண்டைக் காட்சிக்காக பகத் பாசில் உயரத்திலிருந்து குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பகத் பாசிலுக்கு முகத்தில் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அவருடைய மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் உடனடியாக, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பயப்படும் அளவுக்குப் பெரிய காயங்கள் எதுவும் இல்லை என்றும் சில நாட்கள் அவர் ஓய்வில் இருக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மலையன் குஞ்சு படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.