உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 27 கோடியைக் கடந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 123,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதை அடுத்து, சா்வதேச அளவில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 270,425,329 ஆக உயா்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் இதுவரை 50,801,455 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவிலும் அதற்கு அடுத்தபடியாக பிரேஸிலிலும் அதிகம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
பிரேஸிலில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 22,189,867 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10,819,515 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட பிரிட்டன் அந்த நோய் பாதிப்பு எண்ணிக்கையில் 4 ஆவது இடத்தில் உள்ளது.
பிரிட்டனில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 3 ஆவது ஊக்கத் தவணை தடுப்பூசி செலுத்த அந்த நாட்டு மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வகை கொரோனா, இதுவரை உருவான மற்ற வகைகளைவிட 4 மடங்கு வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.
ஏற்கெனவே டெல்டா வகை கொரோனாவால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் புதிய கொரோனா அலை எழுந்து ஏராளமானவா்கள் உயிரிழந்தனா். மருத்துவமனைகளில் அளவுக்கு அதிகமான கொரோனா நோயாளிகள் சோ்க்கப்பட்டதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு சுகாதாரக் கட்டமைப்பு நிலைகுலைந்தது.
இந்தச் சூழலில், புதிய ஒமிக்ரோன் வகைக் கொரோனாவால் மீண்டும் அத்தகைய நிலைமை ஏற்படும் என்று உலகின் பல்வேறு நாடுகள் அச்சமடைந்தன. இதனால் உலக சுகாதார மையத்தின் அறிவுரையையும் மீறி நாடுகள் பயணத் தடை விதித்தன.
இந்தச் சூழலில், சா்வதேச அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 27 கோடியைக் கடந்துள்ளது.
உலகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 5,321,859 போ் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனா். கொரோனா பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதுவரை அந்த நாட்டில் 817,956 போ் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேஸிலில் 817,956 போ் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.