ஜப்பான் நாட்டின் ககோஷிமா பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியிலிருந்து 20 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது.
இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
மேலும் இந்நிலநடுக்கதால் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதேவேளை, குஜராத்தில் புதன்கிழமை மிதமான நில அதிர்வு ஏற்பட்டது. இதுகுறித்து காந்தி நகரைச் சேர்ந்த நிலநடுக்கவியல் துறை அதிகாரிகள் கூறியதாவது : குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டம், கோண்டல் நகரில் நில அதிர்வு ஏற்பட்டது. புதன்கிழமை அதிகாலை 6.53 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.4 அலகுகளாகப் பதிவானது. 7 கி.மீ. ஆழத்தில் இந்த நில அதிர்வு மையம் கொண்டிருந்தது.
இந்த நில அதிர்வைத் தொடர்ந்து, 2 ரிக்டர் அளவு கொண்ட மேலும் இரு பின்னதிர்வுகள் அதே பகுதியில் ஏற்பட்டன. இந்த அதிர்வுகளால் உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், பாகிஸ்தானின் கராச்சி நகரில் இன்று (09) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
சில பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் கூறப்படுகிறது.