வண்மகன் வாழியவே!
,- – – – – – – – – – – –
வரலாற்று வழி தோறும்
தமிழன்
புறநாநூற்றுப் பெருமை சொல்லும்
செப்பேடுகள்
தங்கப் பாளங்களாய் குவிந்து கிடந்தன.
இருப்பினும்
செந்தமிழாளோ கொடும் சிறையில்
நொந்து கிடந்தாள்.
கங்கை கடாரமென
தமிழன்
சங்கு முழங்கிய சங்காரப்
பரணிகள்
செயற்கரிய இலக்கியங்களாய்
எங்கும்
சிலிர்த்துக் கிடந்தன.
ஆயினும்
ஆண்ட தமிழாளோ
வதை கூண்டுள்
நீண்டு சலித்துக் கிடந்ததாள்.
ஏடுகளின் பெருமிதங்கள்
சொல்லச் சொல்ல
மேடைகள் அதிர்ந்தன தான்
கேடுகள்
மறைந்தனவில்லை.
புத்தகச் சுதந்திரத்தில்
மயங்கி மயங்கி
வித்தகத் தோள்கள்
வலுவிழந்து உறங்கின.
கற்பனை விடியலின்
கனவுகளில் மூழ்க மூழ்க
கட்டிய உடைகளும் காற்றோடு பறந்தன.
அந்நியர் கால்களின் கீழ்
அன்னை மண்
கண்ணீர் சேறாய் துவண்டு நெக்கியது.
மொழி முகமிழக்க
கலை பண்ணும் கல்வியும் செல்வமும்
கனிய வாழ்வும் வளமும் மகிழ்வும்
களையிழந்து கண்ணீராய்
உருகியது.
ஆதிக்குடியினம்
ஆதிக்கத் தொழு நோயால்
வீதியில் வீழ்ந்து குற்றுயிராய்த்
துடித்தது.
ஒப்புக்கு குனிந்தொரு துரும்பெடுக்க துணிவின்
துப்பன்றி வளைந்தன தமிழன் முள்ளந் தண்டுகள்.
நான்
எனது எனும் தான்தோன்றிப்
பிணியில் வீழ்ந்து வீழ்ந்து
தமிழன்
தன் நலமே நலமென நினைந்து
மண் நலம் மறந்தான்.
மாநிலம் துறந்தான்.
இரும்புச் சப்பாத்துப்
பாதங்களின் கீழ்
தமிழன்
எறும்புக் குஞ்சுகளாய்
நசுங்கிச் சிதைந்தான்.
எங்கிருந்தோ ஒரு ஒளி
தெறித்தது.
இருள் மூடிய கார் வானில்
ஒளி சூடிய இளம் பிறையொன்று
கதிர் விழி அசைத்துக் கூவிட
ஆறெழுத்தில் ஓர்
அதிசம் உதித்தது.
பிரபாகரன்.
புற வலிமையின்
பிரவாகம்.
விடுதலைப் பேராற்றின்
மடையிலா மற வெள்ளம்.
ஆறு எழுத்தில் முகம் எடுத்த
ஓர்
அரு மருகன்.
பார்வதி தேவியின் மடியில்
அந்த திருமுகன்
பார்வதி அம்மாள் மடியில்
இந்த அருமருகன்
அந்த சரவணனைத் தாலாட்ட
கார்த்திகைப் பெண்கள்
இந்த சக்திபாலனைத்
தாலாட்ட கார்த்திகைத் திங்கள்..
தந்தை செல்வா கண்ட
கனவுக் காவலனாய்
உந்தி எழுந்தான்
உலகம் வியக்க
உலை புகுத்தான்
உரிமை பிறக்க தன்னையே
ஈய்ந்தான்.
அடக்குவோர் கண்டு குனிந்து
அடிமப் பொதி சுமந்த
தமிழனை
அடங்காத் தமிழனாய் நிமிர்ந்து
அக்கினி பொதி சுமக்க வைத்தான்.
குளிரூட்டி அறையிருந்து
ஏட்டுச் சுரை வளர்த்தோர் முன்
அனல் மேட்டின் பாசறை கட்டி
நாட்டின் இறை
மீட்டிட எழுந்தான்
நாற்று நட்டுக் கதிர் அறுப்பதுபோல்
நாற்றான தன்
மகவு மனையாள் தமை
ஊற்றான கொடையாய்
அன்னை
உலைக்களத்தில் விதைத்து விட்டு
பகைவனும் போற்றிடும்
வரலாறாய்
எம் ஊனில் உறைந்து
உயிரில் நிறைந்த எங்கள்
கார்திகை மைந்தனே
எம் இனிய
எந்தையே
தாயே
தமிழே
உலகே
வாழ்த்தினோம் உன்னை
வையம் உள்ளவரை
வாழ்கவென
எங்கள்
பாட்டுடைத் தலைவனே
போற்றினோம் உன் புகழ்
என்றும்
பேற்றான தமிழ் போல் வானளந்து
வாழ்கவென.
வாழிய வாழிய
எங்கள் வண்மகனே
நீ
வாழியவே..!