முல்லைத்தீவு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் வீசிய கடும் காற்று காரணமாக நீர்த்தாங்கி அமைக்கும் பணிக்காக பொருத்தப்பட்ட ஏணி ஒன்று சரிந்து விழுந்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட ஹிச்சிராபுரம் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் பாரிய நீர்த்தாங்கி ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நீர்த்தாங்கி அமைக்கும் பணிக்காக பொருத்தப்பட்ட ஏணி சரிந்து விழுந்த நிலையில் உள்ளக வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு உடைமைகள் பல சேதமடைந்த நிலையில் தெய்வாதீனமாக உயிர் சேதங்கள் காயங்கள் எவையும் ஏற்படவில்லை தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அருகில் இருந்த காணி உரிமையாளர்களின் வேலிகள் சேதமடைந்துள்ளதோடு உள்ளக வீதிகளின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்னிணைப்புக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக குறித்த இடத்துக்கு வருகை தந்த தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் குறித்த ஒப்பந்ததாரர்கள் ஊடாக பாதிப்புக்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொலிசார் இராணுவத்தினர் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து குறித்த நிலைமைகளை பார்வையிட்டுள்ளதோடு மின்சார சபையினர் வருகை தந்து குறித்த பகுதிக்கான மின் இணைப்பை துண்டித்து குறித்த பாகங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.