திருகோணமலை, கிண்ணியா குருஞ்சாங்கேணி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் உத்தரவிட்டுள்ளார்.
ஆணையர் என்.மணிவண்ணனுக்கு அவர் இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.
மேலும், இச்சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, குறித்த ஆற்றில் படகு இயக்கவும், பராமரிக்கவும் அனுமதி வழங்கியது, யார் நடத்தி சென்றது என்ற விடயங்கள் உள்ளிட்ட விவரங்களை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
விசாரணைகளை மேற்கொள்வதற்காக மாகாண நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக விசேட பொலிஸ் பரிசோதனை மேற்கொள்ளுமாறு ஆளுநர், திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த சம்பவத்தில் மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 20 பேர் வரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆளுநர் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் அமைதியாக செயற்படுமாறு ஆளுநர் பிரதேச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.